மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் ஒரு பண்டைய இந்து மத நடைமுறையை நேபாள பாராளுமன்றம் குற்றமாக்கியுள்ளது.
நேபாளத்தின் பல சமூகங்களும் பெண் மாதவிடாயை தூய்மையற்ற ஒன்றாக கருதுவதோடு பின்தங்கிய பகுதிகளில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியில் கூடாரம் ஒன்றில் தங்கவைக்கப்படுகின்றனர்.
இந்த நடைமுறையை கடைப்பிடிப்பவர்கள் புதிய சட்டத்தின் கீழ், மூன்று மாத சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைக்கும் முகம்கொடுக்க வேண்டி வரும்.
இந்த சட்டம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோதும், அது அமுலுக்கு வர ஓர் ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும்.
சஹவுபாதி என அழைக்கப்படும் இந்த நடைமுறையில் மாதவிடாய் காலத்திலும், குழந்தை பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.
இவர்கள் தள்ளிவைக்கப்படுவதால் மரணங்கள் இடம்பெற்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான கூடாரத்தில் தள்ளிவைக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பாம்பு கடித்து மரணமடைந்தார்