ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சிறைச்சாலையிலிருந்து கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் நேற்று இவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோப்பாயில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 9ஆம் திகதி கைதான இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதானவர்களே இவ்வாறு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இரண்டு பேருமே வணிகப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் பணிப்புரைக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை அடுத்து இவர்கள் இருவரும் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.