முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் திகதி சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் கழித்து டிசம்பர் 5ஆம் திகதி காலமானார்.
அவருக்குச் சிகிச்சை அளிக்க வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்கள் வந்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவர்கள் பல தடவை வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.
இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மியாஜான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,”ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் மர்மமான முறையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்தினம் நாள் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் உடல் நலத்துடன்தான் இருந்தார். மருத்துவமனையிலும் ஜெயலலிதாவை வெளியே காட்டவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா உடலில் பல ஊசிகள் போடப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தன. ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் சசிகலாவுக்குத்தான் தெரியும்.
எனவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. எனவே, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து முன்னணி வைத்தியர்களை கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும் மத்திய உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.