நீர்கொழும்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் நேற்று துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவொலின்றிற்கு அமைய, வான் ஒன்றை சோதனையிட்ட வேளையில், குறித்த வானிலிருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பதிலுக்கு சிறப்பு அதிரடிப் படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் சந்தேகநபர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிரடிப் படையினர், குறித்த நபர்கள் வந்த வானை கைப்பற்றியதோடு, அதிலிருந்து ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பத்திரண சம்பிக்க குமார ஜயதுங்க, வஜிர குமார, ஜனக அருண சாந்த, தரிந்து மதுஷ ஆகியோர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் சிலர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.