ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தமிழர்கள் ஒன்றிணைந்தது போல் தமிழக இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய முன் வர வேண்டும் என்று ஜி.பி.பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றான ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஹார்வர்டு தமிழ் இருக்கை (Harvard Tamil Chair Inc.) அமைப்பின் தலைவரும், அமெரிக்க வாழ் தமிழருமான மருத்துவர் ஜானகிராமன், இந்திய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆறுமுகம், பேராசிரியர் பேச்சிமுத்து மற்றும் பல்வேறு தமிழ் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ்,
தாயகத் தமிழர்களின் பங்கு
ஜானகிராமன் பேசும்பொழுது ஹார்வர்டில் தமிழ் இருக்கையின் நோக்கம் என்ன என்பதையும் அது நிறுவப்பட்டதும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைக்கவிருக்கும் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசும்போது “ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய ரூபாய் 42 கோடி கட்டணம் செலுத்த வேண்டும். அதில் 21 கோடி ரூபாய் நிதியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், அமெரிக்க தமிழ் மக்கள் தந்து உதவியிருக்கிறார்கள்.
மீதமுள்ள ரூபாய் 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குத் தாய் தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.
மருத்துவத் தொழிலின் நிமித்தம் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழகத் தமிழர்களான டாக்டர். ஜானகிராமன் டாக்டர் சம்பந்தம் ஆகிய இருவரும் இணைந்து தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதிக்குத் தொடக்க நன்கொடையாக 7 கோடி அளித்தவர்கள். தமிழக மக்களிடம் தமிழ் இருக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுவுடன் இணைந்து தி இந்து தமிழ், ஆங்கில நாளிதழ்கள் பணியாற்றி வருகின்றன.
யோகாவுக்குக் கிடைத்த அங்கீகாரம்
இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், இந்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் அந்தந்த மொழிகளின் தொன்மையான இலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட்டு உலக சமூகத்துக்கு ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. சமஸ்கிருத இருக்கை மூலம் யோகா பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டபின் யோகக் கலை சர்வதேச அளவில் பிரபலமாகி அங்கீகாரம் பெற்றுவிட்டது.
தமிழில் திருக்குறள் உள்ளிட்ட சிறந்த இலக்கியங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரியம் நம்மிடம் இருந்தும் அவை உலக அரங்கை எட்டவில்லை. ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் இது சாத்தியமாகும் என்பதைச் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷிடம் ஹார்வர்ட் இருக்கை குறித்து அமைப்புக் குழுவினர் எடுத்துக்கூறினர்.
ஜி.வி.பிரகாஷ் நன்கொடையும் வேண்டுகோளும்
உடனடியாக ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமையத் தனது தனிப்பட்ட நன்கொடையைக் காசோலையாக அளித்த ஜி. வி. பிரகாஷ் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது “ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தமிழர்கள் ஒன்றிணைந்தது போல் தமிழக இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய முன் வர வேண்டும். நம் தாய்க்கு நாம்தான் சோறிட வேண்டும். நம் தமிழ் மொழியை நாம்தான் வளர்க்கமுடியும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
மேலும் பலர் நன்கொடை
இந்த நிகழ்ச்சியில் ஆப்ரிக்க போசுவான நாட்டின் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சார்பாக நிறைமதி குடும்பத்தினர், ரியாத் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த அருண் சர்மா குடும்பத்தினர், தாய்வான் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த வசந்தன் குடும்பத்தினர் கலந்து கொண்டு நன்கொடை அளித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாகப் பேராசிரியர் பேச்சிமுத்து பேசும்போது, “தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்புகளை எடுத்தரைத்து ஹார்வர்டில் தமிழ் இருக்கை, தமிழன்னைக்கு மேலும் ஒரு மணி மகுடம் என்றும் அதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.