புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ் குமார் என்ற நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி பி.ப 2 மணியளவில் இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராகிய இராஜாங்க அமைச்சரிடம் இரவு 8 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காகவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வித்தியா கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ் குமார் தப்பிச்செல்வதற்கு உதவிய சம்பவம் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரனின் மைத்துனர் மற்றும், பொலிஸ் அதிகாரி ஒருவரையும் இரகசிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.