இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாறுகிறது

இலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களைக் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறுகின்றது.

c1

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்று ஆரம்பமாகியது. அதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைப் பெற்றது. தவான் 119 ஓட்டங்களையும் ராகுல் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சகா 13 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய சகா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ஓட்டங்களுடனும், முகமது சமி 8 ஓட்டங்களுடனம் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ரன்கள் குவித்தது.

உணவு இடைவேளைக்கு முன்னர் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து டில்ருவான் பெரராவிடம் பிடி கொடுத்து 96 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில்  அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதையடுத்த இந்திய அணி தனது முதல்  இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லக்‌ஷ்ன் சந்தகன் 5 விக்கெட்களையும் மிலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்களையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.