நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கும் இனம்தெரியாத குழுவினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய இருவரில் ஒருவரின் நிலையே கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது குறித்த சந்தேகநபர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு சந்தேகநபர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச் செயலொன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து இரண்டு வான்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது வானில் இருந்த சந்தேகநபர்கள் பொலிஸ் அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸ் அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டில் இரு சந்தேகநபர்கள் காயமடைந்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களிடமிருந்து டி – 56 ரக துப்பாக்கிகள் இரண்டும் ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.