நான் ஒரு கலைஞன், இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோர் இன்று திருகோணமலைக்கு வருகை தந்தனர்.
அவர்களது இசை நிகழ்ச்சி இன்று மாலை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடக்கவிருப்பதோடு அது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்றது. இதன்போதே குறித்த கருத்தை வெளியிட்டார்.
அதில் “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது,
பாடகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த நிகழ்வானது யாழில் நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் கடந்த முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது, எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் தெரிவித்த பின்னரே தாம் இங்கு வந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து, யாழ்ப்பாண நிகழ்ச்சியின் இறுதியில் அவர் பாடல் ஒன்றை பாடி முடித்தவுடன் முன்னாள் அமைச்சர் எனக்கு பொன்னாடை அணிவித்தார். அப்போது அவர் யாரென்று கூட தெரியாத நிலையில் அவரது மரியாதையை நான் ஏற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தாம் நாடு திரும்பிய வேளை குறித்த விடயத்தினை மேற்கோள்காட்டி பலர் பல வகையில் சர்ச்சைகளை கிளப்பியிருந்தனர்.
இப்பிரச்சினை இருந்து கொண்டிருக்க வேறு ஒரு இசை நிகழ்ச்சிக்கு கனடாவிற்கு சென்றிருந்த வேளை அங்கும் குறித்த நிகழ்வினை நடத்த சிக்கலாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதனையடுத்து தாம் மன்னிப்பு கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதை கனடாவில் இருப்பவர்கள் ஒரு அறிக்கையாக வெளியிட்டனர் எனவும் குறித்த அறிக்கைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
நான் ஒரு கலைஞன், நான் இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்