வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
”சூழ்ச்சிக் குழுக்களால் ஆங்காங்கே நடத்தப்படும் சில செயல்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.
வடக்கில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவத்துடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை.
ஏதாவது நடந்தால், உண்மையில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், விடுதலைப் புலிகளுடன் அதனுடன் இணைப்பது இலகுவானது என்பது எனது கருத்து.
வடக்கில் வேறு சூழ்ச்சிக் குழுக்கள் இருக்கின்றன. ஆவா குழு விடுதலைப் புலிகள் இல்லை.
தெற்கில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவர்களை நீங்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்த முடியாது. 1971-1981 குழு போன்று அவர்களை அடையாளப்படுடுத்த முடியாது. அது ஒரு முத்திரை.
12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலிகளை நாங்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தியுள்ளோம். அவர்களில் யாராவது ஒருவர் எதையேனும் செய்தால், அந்த 12 ஆயிரம் பேரும் நாளை காலையே ஆயுதம் ஏந்தி போரைத் தொடங்குவார்கள் என்று அர்த்தமில்லை.
அவ்வாறு நடப்பதானால், நாங்கள் களநிலவரத்தைக் கண்காணிக்காமல் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
வடக்கில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் விடுதலைப் புலிகள் என்று அடையாளப்படுத்தும் போது, உண்மையான களநிலவரம் புறக்கணிக்கப்படுகிறது.
கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறையினர் தாக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடக்கின்றன. அதனால் நாட்டின் அமைதிக்கு உடனடியான பாதிப்பில்லை. இவை பெரிய விடயங்களில்லை.
அத்திட்டிய வங்கி கொள்ளையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அது கொள்ளைச் சம்பவம் என்று யாரும் பொருட்படுத்தவில்லை. அதுபோல வடக்கில் நடந்தால், விடுதலைப் புலிகள் என்று கூறுவது சரியில்லை.
வடக்கில் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் டிவிசன்கள் உள்ளன. வடக்கில் இராணுவம் முடக்கி வைக்கப்படவில்லை. நாங்கள் வெளியே வருவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.