புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) உதவியுடன் பரீட்சை எழுதிய மாணவி

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) உதவியுடன் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர் கையும் மெய்யுமாக பிடிப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

images (20)

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை உயர்தர பரீட்சைக்காக மாணவி ஒருவர் தோற்றி இருந்தார்.

இந்த நிலையில் குறித்த மாணவி தனது உடல் தெரியாத வகையில் தமது கலாச்சார உடையுடன் வந்திருந்தார்.

பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) இயங்கிக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பரீட்சை குறித்த சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.