வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாதோருக்காக 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஒப்பந்த நிறுவனங்கள் ஊடாகவே இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு தலைமையில் ஏனைய சில அமைச்சுக்கள் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
இத்தகைய ஒரு திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பதையும் அது தொடர்பிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதையும் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி உறுதிப்படுத்தினார்.
வடக்கு, கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளைக் கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு மக்களிடம் இருந்தும் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்குக் காலநிலைக்கு உகந்தவையல்ல என்று நிராகரிக்கப்பட்டன. அத்துடன் அதற்கான செலவில் குறைந்தது இரண்டு கல் வீடுகளை அமைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
கடும் எதிர்பை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்படும் நிலையை எட்டியது. எனினும், அதில் 6 ஆயிரம் வீடுகளையாவது அமைப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விடாப்பிடியாக முயன்ற வருகிறார்.
இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிறுவுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
கல்வீடுகளை அமைக்கத் தகுதியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நிதியையும் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை அரசு நீண்ட காலக் கடன் அடிப்படையில் செலுத்தும்.
இதற்கு அமைவாகக் கேள்விகோரலை விளம்பரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அது வெளியிடப்படும் என்று தெரியவருகின்றது. கேள்விகோரல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் முன்னெடுக்கப்படும். இந்த அமைச்சுடன் இணைந்து வேறு சில அமைச்சுக்களும் பணியாற்றும் என்று தெரிவிக்கப்படுகின்றது.