தன்னுடைய பேரனைத் தீண்டிய நாக பாம்பை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற தாத்தா

தன்னுடைய பேரனைத் தீண்டிய நாக பாம்பை, அவருடைய தாத்தா, தன்பேரன் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கே எடுத்துச் சென்றமையால், அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதுடன், வைத்தியசாலையும் அல்லோல கல்லோலப்பட்டது.

DSCN9139

இதேவேளை, வைத்தியசாலைக்கு வந்திருந்தவர்கள் மட்டுமன்றி, தாதியர்களும், வைத்தியர்களும் மற்றும் சிற்றூழியர்களும் சிதறியடித்துப் பதறியோடிவிட்டனர்.

இந்தச் சம்பவம், நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, லக்ஷபான தோட்டத்தில் மூன்று வயது சிறுவனொருவன், வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நாகபாம்பொன்று அவரைத் தீண்டியுள்ளது.

இச்சிறுவன் உடனடியாக லக்ஷபான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தன்னுடைய பேரனை எந்தப் பாம்பு தீண்டியது என்று கேட்டால் என்னசொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போன, சிறுவனின் தாத்தா, அந்தப் பாம்பு சென்ற, புற்றை உடைத்து, பாம்பைப் பிடித்து, ஜாடியில் போட்டுக்கொண்டு, வைத்தியசாலைக்கே சென்றுவிட்டார்.

வைத்தியசாலைக்கு சென்ற தாத்தா, பேரனின் நலன்குறித்து விசாரித்ததுடன், தன் பேரனைக் கடித்த நாகபாம்பை, வைத்தியரிடம் ஒப்படைப்பதற்காக, ஜாடியிலிருந்து பாம்பை வெளியில் எடுத்துள்ளார்.

அப்போது, அச்சமடைந்த தாதியர்களும், சிற்றூழியர்களும் அங்கு வந்திருந்தவர்களும் ஏன் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நோயாளிகளும், சிதறியடித்துப் பதறியோடினர்.இதனால், வைத்தியசாலையே சிறிது நேரத்துக்கு அல்லோல கல்லோலப்பட்டது.