விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கருதப்படும் எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த துப்பாக்கியை விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் இராணுவ விசேட படையணியின் சார்ஜன்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கியினை 250,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது, ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் சடலத்துக்கு அருகில் இருந்து குறித்த துப்பாக்கி எடுக்கப்பட்டதாகவும்,
எனினும், அதனை பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்காது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த போது இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கைதுசெய்யப்பட்டுள்ள சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாகவும், அவர் பல இலட்சம் ரூபாய் கடன்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.