தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய டிபென்டர் வாகனத்தில் உள்ள மர்மங்கள்

கொலையுண்ட ரகர் வீரர் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிபென்டர் ரக வாகனத்தின் நிறம் இரண்டு தடவைகள் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

tajudeen-2

இந்த டிபென்டர் ரக வாகனம், சிராந்தி ராஜபக்ச தலைமையிலான சிரிலியே சவிய அமைப்பினால் பயன்படுத்தப்பட்டிருந்தது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் சிரிலியே சவிய அமைப்பிற்கு இந்த வாகனம் வழங்கப்பட்டிருந்தது.இந்த வாகனம் இரண்டு சந்தர்ப்பங்களில் நிறம் மாற்றப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு இது குறித்து அறிவிக்காமலேயே வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

சிரிலியே சவியவிற்கு வழங்கப்பட்டிருந்த டிபென்டர் ரக வாகனம், ஹபரகட பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் போக்குவரத்து முகாமையாளர் ஒருவரின் வீட்டிலிருந்து இந்த வாகனம் மீட்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த வாகனம் எவ்வாறு தமது வீட்டுத் தோட்டத்தில் நிறுத்தப்பட்டது யார் இதனை நிறுத்தினார்கள் என்பது தெரியாது என போக்குவரத்து முகாமையாளர் பொலிஸாரிடம் தெரி;வித்திருந்தார்.

சிரிலியே சவிய அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தை ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்சவே பயன்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி வரையில் யோசித ராஜபக்சவே இந்த வாகனத்தை பயன்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனப் பயன்பாடு குறித்து சிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.