நாடு முழுவதும் , சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகள் ஆகும். ஆங்கில மொழி இணைமொழி.
தேசிய பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதேவேளை மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய பிரச்சினையில் நூற்றில் 50க்கு மேற்பட்ட தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரசாங்க படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் அவரது அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மும்மொழிகளிலும் அரசாங்க படிவங்கள் அமைப்பது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் அது இடம்பெறவில்லை. விசேடமாக தமிழ்மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே எந்தவொரு அரசாங்க அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது என்று தட்டிக்கழிக்க முடியாது என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், தெற்கு பிரதேசத்தில் அனைத்து அரசாங்க படிவங்களும் சிங்கள மொழிகளிலேயே இருக்கின்றன. இது தவறானது மட்டுமன்றி சட்ட விதிமுறைகளுக்கு முரணானது.
இதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாண சபை சார்ந்த பகுதிகளிலும் தமிழ் மொழியில் மாத்திரமே படிவங்கள் இருக்கின்றது. இதுவும் சட்டவிதிகளுக்கு முரண்பட்டதாகும்.
நாட்டின் எந்தப் பகுதியிலாவது அரச படிவங்கள் வெறுமனே சிங்கள மொழியில் இருக்குமாயின் அது குறித்து தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அமைச்சர் மனோ கணேசன் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.