இன்டர்போலின் உதவியை நாடுகிறது இலங்கை அரசாங்கம்!

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

interpol

ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் ஜேர்மனியில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வழங்கிய இத் தகவலின் பிரகாரம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம், குறித்த சந்தேகநபரை நாடுகடத்த ஜேர்மனியிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் அண்மைய காலமாக இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்னணியில் ஆவா குழு உறுப்பினர்கள் செயற்படுவதாக குறிப்பிடப்படும் நிலையில், இதுவரை சுமார் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். நேற்றைய தினமும் கொக்குவில் பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.