சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் குறித்து ஆரம்பம் முதல் தற்போது வரை நடைபெற்ற அனைத்தையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் விபரித்துள்ளதாக ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சீனாவின் உதவியுடன் 320 மில்லியன் ரூபா செலவில் ஏவப்பட்ட சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து வாக்கு மூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி இருந்தார்.
குறித்த விசாரணைகள் முடிந்து வெளியே வரும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அனைவரும் என்னிடம் கேட்கின்றார்கள் “எங்கே இந்த செட் லைட் உள்ளது?” என, இவர்களும் என்னிடம் முதலில் இதையே கேட்டார்கள் “செட்லைட் எங்கு உள்ளது என்று, இதற்கு ஆரம்பம் முதல் தற்போது வரை நடந்தது அனைத்தையும் தெரிவித்தேன்.
குறித்த திட்டத்தில் முன்னர் இருந்தவர்கள் தற்போது இல்லை. விண்வெளி அமைப்பு பொறியியல் (space systems engineering) குறித்து நன்கு தெரிந்த ஒருவன் இலங்கையிலேயே நான்தான்.
மிகவும் சாதாரணமான முறையிலேயே விசாரணைகள் நடைபெற்றன.
குறித்த சுப்ரீம் ஜெட் – 1 எனும் செயற்கைக் கோள் என்னுடையது அல்ல, அதில் வேலை செய்த ஒருவனே நான் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.” என ரோஹித்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.