அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை என மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எவ்வித வன்முறை சம்பவங்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட எந்தவொரு விடுதலை புலி உறுப்பினர்களும் தொடர்பில்லை என தான் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் தெரிவிப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க நிகழ்வில் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இதுவரையில் புனர்வாழ்வளித்த 12190 முன்னாள் போராளிகள் எந்தவொரு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடவில்லை.
யாழ்ப்பாணம் அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வன்முறை செயற்பாடுகள் அல்லது சட்டவிரோதமான செயற்பாடுகள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என எங்களால் அறிக்கைக்கமையவே சுட்டிக்காட்ட முடியும்.
ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் தெற்கு பிரதேசத்தில் ஒரு உறுப்பினர் பாதாள உலக சம்பவம் ஒன்றிற்கு தொடர்பட்டிருந்தார்.
எங்களால் இன்னும் ஒருவரின் மனதை முழுமையாக சரிப்படுத்துவதற்கு முடியாது. தற்போது நாங்கள் 12190 பேரை புனர்வாழ்வளித்த போதிலும், 100 வீதம் புனர்வாழ்வு பெற்றுள்ளதாக கூற முடியாது.
நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அந்த நபர்களில் ஒருவரும் இதுவரையில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை என நாங்கள் நம்பிக்கையுடன் கூற முடியும்.
இது போன்ற சம்பவங்கள் தெற்கில் இடம்பெறுகின்றது என்றால் அது சிலரின் தேவையின் நிமித்தம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் தலை தூக்குவதாக போலி பிரச்சாரம் செய்யப்பட்டால், அது தலைவர்களின் வேறு நோக்கம் என்றே கூற வேண்டும்.
மக்கள் மனங்களில் மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதனூடாக சில தரப்பினர் அரசியல் செய்ய முயல்கின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.