இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலங்களில் ஒன்றான கோரக்பூர் பிரதேசத்திலுள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோரக்பூரின் பாகாகாடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரம்தேவ் யாதவ் கடந்த 9ஆம் திகதி இவ்வாறு பிறந்து எட்டு நாட்களேயான தனது இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.
முப்பது வயதான அவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
பிறந்த அடுத்த நாள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து பிரம்தேவ் யாதவ் குறிப்பிடுகையில்,
தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகும், அதற்கு வசதியில்லை என்பதால் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றோம்.
அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். பெற்றோர்களை கூட குழந்தைகளிடம் நெருங்க விடவில்லை என்கிறார் பிரம்தேவ்.
கேட்டாலும் எந்த தகவலும் சொல்ல மாட்டார்கள். ஒன்பதாம் திகதி இரவு எட்டு மணி என்னிடம் வந்த மருத்துவர், உங்கள் ஆண் குழந்தை இறந்து விட்டது, பெண் குழந்தையின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று சொன்னார்.
ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
தினமும் இரண்டு சிரிஞ்ச் நிறைய இரத்தத்தை மருத்துவர் எடுப்பார். இறுதியில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டதும், எங்கள் இரத்தத்தை கொடுத்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.
எங்களது குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. குழந்தை இறந்ததற்கான காரணத்தை மருத்துவர் சொல்லவில்லை, சில மணி நேரங்களில் பெண் குழந்தையும் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது.
பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது மற்றும் பத்தாம் திகதிகளில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
மருத்துவமனையில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர், எல்லா குழந்தைகளுக்கும் ஒக்சிஜன் பைகள் பொருத்தப்பட்டிருந்தன.
ஒக்சிஜன் விவகாரம் பற்றி எங்கள் யாருக்கும் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், என் மகளின் வாயில் இருந்து இரத்தம் வடிந்திருந்தது.
மூச்சுத் திணறலால் மரணம் ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்டேன். அழுது கொண்டே குழந்தைகளை சடலங்களாக வீட்டிற்கு தூக்கிச் சென்றோம் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் பிரம்தேவ்.
பிரம்தேவின் நான்கு சகோதரர்களும் விவசாயம் செய்தும், பிற சில வேலைகள் செய்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர். குழந்தைகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத பிரம்தேவின் மனைவி அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
எட்டு ஆண்டு தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைகளை எட்டு நாட்களில் பறிகொடுத்து விட்டோம். குழந்தைகளுடன் இரண்டு நாட்கள் கூட முழுமையாக இருக்கவில்லை என்று புலம்புகிறார் பிரம்தேவின் தாய்.
குழந்தைகளுக்கு முறையான சிகிச்சையளிக்காத மருத்துவர்கள், குழந்தைகளை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள், ஏதாவது கேட்டால் கண்டபடி திட்டுவார்கள்.
என் மருமகள் பித்துப் பிடித்தவள் போல் வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருக்கிறாள், யாருடனும் பேசுவதேயில்லை என்கிறார் பிரம்தேவின் தாய்.
தொடர்ந்து பிரம்தேவ் கருத்துத் தெரிவிக்கையில், இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அருகிலேயே புதைத்து விட்டோம். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைகளுக்கும் நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்.
பிஞ்சுக் குழந்தைகளை அநியாயமாக பலி கொடுத்திருக்கும் குடும்பத்தினரின் துக்கத்தை யாரால் ஈடு செய்ய முடியும்?