துப்பாக்கிகளை காட்டி யாரையும் கட்டுப்படுத்தும் அரசியல் கலாசாரம் எமது நல்லாட்சியில் இல்லை. சுயாதீனமான சட்ட நகர்வுகளின் மூலமே நல்லாட்சி அரசாங்கம் சகல பிரச்சினைகளையும் கையாள்கின்றது என பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஒரு நீதிமன்றம் அல்ல பத்து நீதிமன்றங்களை அமைத்தாவது திருடர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தினை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வீதி மறுசீரமைப்பு நகர்வுகளில் நாம் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றோம். பேருந்து போக்குவரத்து தொடர்பில் நேற்றில் இருந்து நாம் முன்னெடுத்த நகர்வுகள் எமக்கு வெற்றியளித்துள்ளன. அதேபோல் வீதி சட்டங்கள் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்போது வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் நாம் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
முன்னைய ஆட்சியின் போது அதிக நிதி செலவில் வீதி நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஆனால் நாம் அவ்வாறான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதில் கொள்ளைகள், ஊழல் மோசடிகள் எதற்கும் இடமில்லை.
துப்பாக்கிகளை காட்டி எவரையும் அச்சுறுத்தியோ, கட்டுப்படுத்தியோ நல்லாட்சி அரசாங்கம் செயற்படவில்லை. நாம் சட்டத்தின் மூலமாக மட்டுமே எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். முன்னர் துப்பாக்கிகள் மட்டுமே பேசின. அரசாங்கம் அமைதியாக இருந்தது. எவரும் கருத்துக்களை முன்வைக்க இடமளிக்கவும் இல்லை. அபிவிருத்திகளின் பின்னணியில் இருந்த ஊழல்கள் தொடர்பில் எவரும் கருத்துக் கூற முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இன்று நாம் அனைத்தையும் மாற்றியுள்ளோம். சட்ட நடவடிக்கைகளை மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதேபோல் இராணுவம் மற்றும் பொலிஸ் துறையினர் தேவையான சந்தர்ப்பங்களில் சரியாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் திருடர்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பது சற்று ஏமாற்றமான விடயமாக இருந்தாலும் கூட விரைவில் சட்ட நகர்வுகள் பலமடையும். கடந்த கால திருடர்கள் மட்டுமல்ல நிகழ்கால அரசாங்கத்தின் திருடர்களும் கூட சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்படுவார்கள். இவர்களை தண்டிக்க ஒரு நீதிமன்றம் அல்ல பத்து நீதிமன்றங்களையாவது அமைத்து இவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றார்.