தாய், மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் செசன்ஸ் கோர்ட்டால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 2 பேரை விடுதலை செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
பீட் மாவட்டத்தில் உள்ள சோரம்பா என்ற ஊரை சேர்ந்தவர் சந்த் சேக். இவரது மனைவி நூர்ஜகான், மகள் பர்வீன்(வயது14). இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே 28-ந்தேதி நூர்ஜகான் மற்றும் பர்வீன் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். போலீசார் தாய், மகளை கற்பழித்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா(23), அச்யுத் சுன்சே(24) ஆகியோரை கைது செய்தனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை பீட் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் கோர்ட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்சியாக வைத்து வாலிபர்கள் 2 பேருக்கும் தூக்குதண்டனை வழங்கி உத்தரவிட்டது.
விடுதலை
இந்த உத்தரவை எதிர்த்து வாலிபர்கள் 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, சோனவானே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், “சாட்சிகள் கூறிய விவரங்கள் மாறி மாறி உள்ளன. போலீசாரின் சாட்சி, ஆதாரங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை. அரசியல் கட்சியினரின் தலையீட்டால் இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என நினைக்கிறோம்” என கூறினர்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.