இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரண துங்க இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாக தெரிவித்துள்ள கரு த்து தொடர்பில் அரசாங்கம் 24 மணி நேரத்திற்குள் மக்களை தெளிவூட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை யிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத் தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மிகவும் பாரதூரமான அறிவித்தலாகும். “இலங்கை கிரிக்கெட் துறை இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. கிரிக்கெட் சபையின் முறையற்ற செயற்பாடுகளினால் அத்துறையை அபிவிருத்தி செய்யமுடியாதுள்ளது. காட்டிக்கொடுப்பு மற்றும் சூதாட்டம் என்பன இலங்கை கிரிக்கெட்டில் அதிகரித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த இந்த பாரதூரமான அறிவித்தல் தொடர்பில் 24 மணி நேரத்தில் அரசாங்கம் மக்களை தெளிவூட்ட வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் அல்லது கிரிக்கெட் சபையின் தலைவருக்கு அப்பொறுப்பு உள்ளது. எனவே இது விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
அல்லாவிடத்து நாட்டின் கிரிக்கெட் துறை மேலும் வீழ்ச்சியடையும் என்பதுடன் கிரிக்கெட் சபை மீதுள்ள நம்பிக்கையும் இல்லாதுபோகும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதுடன் உரிய விசாரணைகளை நடத்தி கிரிக்கெட் துறையிலுள்ள மோசடிகளை களைந்து அத்துறையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.