பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய ஜேர்மன் மருத்துவர் ஒருவருக்கு சிலி நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ஜேர்மனி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஜேர்மன் குடிமகனான Hartmut Hopp(70) என்ற மருத்துவரின் சிறை தண்டனையையே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் சிலியில் செயல்படு வந்த நாஜிகளில் அமைப்பான Colonia Dignidad குழுவின் நிறுவனரான Paul Schaefer என்பவருக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.
கொலோனியா டிக்னிடட் என்ற தன்னாட்சிப் பகுதியில் மக்களை அடிமைகள் போன்று நடத்தப்பட்டனர். மட்டுமின்றி வலுக்கட்டாயமாக அவர்களின் போதனைக்கு உட்படுத்தி கொடுமைப்படுத்தியும் வந்துள்ளனர்.
மேலும் அந்த தன்னாட்சிப்பகுதியானது சிலியின் சர்வாதிகாரி Augusto Pinochet உடன் கைகோர்த்துக் கொண்டு, அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்வதற்கும் மரணிப்பவர்களை புதைப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த குழுவில் செயல்பட்டு வந்த மருத்துவர் Hartmut Hopp மீது சிலி அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்தது. அதில் 16 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சித்திரவதைக்கு உட்படுத்திய வழக்கும் அடங்கும்.
இந்த நிலையில் இறுதி தீர்ப்பு வெளியாகும் முன்னர் குறித்த மருத்துவர் சிலியில் இருந்து தமது சொந்த நாடான ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இதனையடுத்து சிலி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, குறித்த மருத்துவருக்கு அவரது சொந்த நாட்டிலேயே தண்டனை காலத்தை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என ஜேர்மன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜேர்மனியின் Krefeld நீதிமன்றம் மருத்துவர் Hartmut Hopp சிலியின் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டுகள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தண்டனையை மேல்முறையீடு செய்ய இருப்பதாக அந்த மருத்துவர் தரப்பு தெரிவித்துள்ளது.