யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
அதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் நூற்றுக்கு 10.87 வீதமாகும். இதனைவிட இந்த பயிர்ச்செய்கையில் தங்கியிருப்போரது எண்ணிக்கையும் பாரியதாகவுள்ளது.
வடக்கில் எமது மண் வளத்தை ஆராய்ந்து, தற்போதைய உலகச்சந்தையின் கேள்விகளுக்கு பொருத்தமான, பொருளாதார ரீதியில் அதிகம் பெறுமதிவாய்ந்த பயிர்களை அறிமுகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்.
எமது நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி மற்றும் உப உணவுப் பொருட்களின் இறக்குமதிகளுக்காக அதிகளவில் அந்நிய செலாவணியை இழக்க வேண்டியுள்ள நிலையில், புகையிலையை தடை செய்யவுள்ள செயற்பாடானது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது குறித்து விவசாய அமைச்சு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
புகையிலை உற்பத்தி தடை எனில், அதனை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கும், அதற்கான மாற்றுப் பயிர்களை விரைவில் அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் விவசாய அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.