புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு – பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக் சொல்ஹெய்ம்?

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.

pulithevan-erick-solheim

அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம், வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், கடைசியாக புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்த போது, தாம் நேரடியாக பேசவில்லை என்றும், வேறொரு நோர்வேஜிய சகாவே அவருடன் பேசியதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த உரையாடலின் போது, தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.

இந்தச் செவ்வியில் எரிக்சொல்ஹெயம்  “அது மே 17ஆம் நாள். அது நோர்வேயின் தேசிய நாளும் கூட. அதனால் நினைவில் வைத்திருக்கிறேன்.

ஒஸ்லோவில் அணிவகுப்புக்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது, புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவர் விடுதலைப் புலிகளின் மிகச்சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார்.

சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.

நான் அவருடன் நேரடியாகப் பேசவில்லை. ஆனால், நாங்கள் தலையீடு செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது என்று நோர்வேஜிய சகா ஒருவர் அவருக்கு கூறினார். ஏனென்றால் போர் முடிவுக் கட்டத்தை நெருங்கி விட்டது.

நாம் தலையீடு செய்வதற்கு சாத்தியங்கள் இருந்த போது, போராட்டத்தைக் கைவிடுவதற்கு முன்னர் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தோம் என்பதை  நாம் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினோம். ஆனால் இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது.

பெரியதொரு வெள்ளைக்கொடியை ஏந்திச் செல்லுங்கள்.  ஒலிபெருக்கிகள் மூலமோ வேறெந்த வழியிலோ உங்களின் எண்ணத்தை, சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு தெரியப்படுத்துங்கள், என்பதைத் தான் எம்மால் உங்களுக்கு கூற முடியும்.

எமது பக்கத்தில் இருந்து சிறிலங்கா தலைவர்களுக்கு சரணடைய விரும்பும் உங்களின் விருப்பம் தெரியப்படுத்தப்படும் என்று அவரிடம் நாம் கூறினோம்.

அதன்படியே, நிச்சயமாக அதனை சிறிலங்கா தலைவர்களுக்கு தெரியப்படுத்தினோம். நாங்கள் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் ஆலோசகரான பசில் ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தினோம்.

நாங்கள் மட்டுமல்ல, முக்கியமான சில தமிழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்தனர். சில இந்தியா இடைத்தரகர்களும் கூட, சிறிலங்கா தலைமைக்கு தகவல் அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு நாள் கழித்து. நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், சரியாக எனக்குத் தெரியவில்லை.  பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை.

எனினும், பிரபாகரனின் 12 வயது மகன், சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம்.  இது முற்றிலும், மிக மோசமான பொறுப்பற்ற, தீய செயல்.

இந்த விடயத்தில் சிறிலங்கா படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்.

இந்தக் கொலைகள் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி உள்ளது. ஏன் அவர்கள் சரணடைதலை ஏற்றுக் கொள்ளவில்லை, நீதிமன்றத்தில் நிறுத்தாமல், அவர்களை ஏன் கொன்றார்கள்…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.