தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தினமும் காலை 8 மணிக்கு தேசிய கீதம் கிராமம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதனை கேட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தங்களது பணிகளை அப்படியே விட்டுவிட்டு, சாலையில் நின்றபடி தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்றைய இளைஞர்களுக்கு தேசப்பற்றை வளர்க்கும் வகையில், கரீம் நகர் மாவட்டம், ஜம்மிகுண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு நூதன உத்தியை கையாண்டு வருகிறார். கடந்த சுதந்திர தினம் முதல், ஜம்மிகுண்டா கிராமம் முழுவதும் சரியாக காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கிறது.
அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் சாதாரண பொதுமக்கள் உட்பட அனைவரும் 52 நொடிகள் வரை ஒலிபரப்பாகும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். இது தற்போது அந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜம்மிகுண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவையும் விடுமுறை நாட்கள் போல்தான் தோன்றுகிறது. இதில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும். இந்த நாட்களிலும் இவர்கள் மிகவும் தாமதமாகத்தான் தூங்கி எழுகின்றனர்.
சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் சினிமா தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை முன்னோடியாக கொண்டு நான் எனது கட்டுப்பாட்டில் வரும் ஜம்மிகுண்டா கிராமத்தில் தினமும் தேசிய கீதத்தை ஒலிபரப்ப முடிவு செய்தேன். அதன்படி, ஒரு வாரத்துக்கு முன்பே கிராமம் முழுவதும் இதுகுறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சரியாக காலை 7.58 நிமிடத்துக்கு தேசிய கீதம் ஒலிபரப்புவது குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதன் பின்னர் சரியாக காலை 8 மணிக்கு தேசிய கீதம் 52 நொடிகள் ஒலிபரப்பாகும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என கிராமம் முழுவதும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தேன். இதை தற்போது அனைவரும் தேச பக்தியுடன் கடைபிடித்து வருகின்றனர்.
இதற்கு பொதுமக்கள் மற்றும் எனது மேலதிகாரிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை கரீம் நகர் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி கூறினார்.