நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவான் நேற்று அறிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரி ஷாந்த லலித் என்பவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்படவுள்ளார் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிபதி சந்தன கலன்சூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் வைத்து, நாமல் ராஜபக்ஷ தன்னை அச்சுறுத்தி திட்டிய முறை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஷாந்த லிலித், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்திய கிரிஸ் நிறுவனத்திடம் 70 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டமை தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அந்த விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரியையே நாமல் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.
சாட்சியாளர்கள் மற்றும் குற்றவாளிகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நாமல் பாரிய குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றசாட்டின் கீழ் நாமல் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.