தமிழர்களுக்கு எதிரான சுமனரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு கரணம் என்ன ?

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் திடீரென மனம் மாறியதில் உள்ள பின்புலம் என்ன என்பது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

h-620x348

மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிக்கையில்,

எமது மாவட்டத்தில் தற்போது பலரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். தமிழ் மக்களுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், தமிழ் அதிகாரிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அவர் திடீரென மனம் மாறியிருந்தால் அதன் பின் புலம் என்ன? என்பது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு பொது பல சேனா தலைவர்களை அவர் வரவழைத்த வேளை எமது இளைஞர்கள் அவருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். அவ்வேளை அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் தங்களுக்கு போக இடமின்றி அலைந்து திரிந்து தற்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் தஞ்சம் பெற்றுள்ளனர். அவர்களை சுமனரத்ன தேரர் பயன்படுத்த முற்படுகின்றார்.

இரு நாட்களுக்கு முன்பு எமது நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு எதிராக விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையை அறிந்து கொள்ளாதவர்களே இவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏதோவொரு கருத்தை வெளிப்படுத்தியோ அல்லது கோரிக்கைகளை முன்வைத்தோ ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் செய்வது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஜனநாயக உரிமை அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் உண்மையை விளங்கிக் கொள்ளமல் அவற்றை செய்வது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.