மாத்தறை வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவரும் பிறந்த சிசு ஒன்றும் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூன்றாவது குழந்தை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதுடைய பெண் ஒருவர் குழந்தை பிரசவித்தவுடன் உயிரிழந்துள்ளார்.
அவரால் பிரசவிக்கப்பட்ட குழந்தை தற்போது மாத்தறை வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12ஆம் திகதி குழந்தை பிரசவித்தவுடன் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.
மாத்தறை கரகொட பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தங்காலை, பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய தாய் பிரசவித்த ஒரு நாள் வயதுடைய குழந்தை நேற்று மாத்தறை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.
இந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாத்தறை வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.