முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய போது எவருக்கும் வழங்கப்படாத சிறப்பு வசதியை திணைக்களம் அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான டிபென்டர் வாகனம் குறித்து விசாரிக்க ஷிரந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது தான் வழங்கும் வாக்குமூலம் சரியாக எழுதப்படுகிறதா என்பதை பார்க்க தனக்கு சட்டத்தரணி ஒருவரின் உதவி அவசியம் என ஷிரந்தி, அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதற்கு அதிகாரிகள் சம்மதித்துள்ளதுடன் ஷிரந்தி ராஜபக்ச வாக்குமூலம் வழங்கும் போது ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க அருகில் இருந்துள்ளார்.
எவ்வாறாயினும் சாதாரணமாக சட்டத்தரணி ஒருவருக்கு இப்படியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. தேவையெனில் பின்னர் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
எனினும் விசாரணை நடத்தும் போது சட்டத்தரணி ஒருவர் உடன் இருக்க அனுமதி வழங்கப்படுவதில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவரும் தனக்கு சட்டத்தரணியின் உதவி அவசியம் என கோரி போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
விசாரணை நடத்தும் போது சட்டத்தரணி ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் நடந்த வழக்கொன்றின் தீர்ப்பு எனவும் இலங்கையின் நீதிமன்றம் அப்படியான தீர்ப்பை வழங்கினால், அதனை ஏற்று அப்படியான சந்தர்ப்பத்தை வழங்க தயார் எனவும் அதிகாரிகள், யோஷித்தவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.