மகிந்த ராஜபக்சவின் குமுறல் – எந்த அரசும் இந்தளவிற்கு பழிவாங்கியதில்லை!

இலங்கையில் ஆட்சி நடத்திய எந்தவொரு அரசும் தனது அரசியல் எதிரிகளை இந்தளவிற்கு பழி வாங்கியது கிடையாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

makintha1

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவிக்கையில்,

இந்தப் பழிவாங்கலின் உச்சகட்டமாக இந்த வாரத்தில் எனது மனைவியையும், மகன்கள் இருவரையும் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை என்ற பெயரில் மணிக்கணக்கில் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

எனது மனைவி ஷிராந்தியிடம் அநாவசியமான அநாகரிகமான கேள்விகளைக் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த அரசில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருசில பெரும் புள்ளிகள் செய்யும் மோசடிகள் அம்பலமாகும் போதெல்லாம் அரசு அந்த மோசடிகளைத் திசை திருப்புவதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பலிக்கடாவாக்கி வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக எங்களை விசாரணைக்கு அழைப்பதும் அதன்பின் மாதக்கணக்கில் அதைத் தள்ளிப்போட்டு விட்டு தங்களது மோசடிகளைச் செய்வதும் இந்த அரசுக்குப் பழகிப்போய் விட்டது.

நாங்கள் தவறு எதையும் செய்யவில்லை என்பதால் எந்த விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். மின்சாரக் கதிரையில் ஆரம்பித்து இன்று ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் வரை இந்த அரசு எங்களை மிரட்டி வருகின்றது.

நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தையும், சட்டம், ஒழுங்கையும் கிடப்பில் போட்டு விட்டு ராஜபக்ச குடும்பத்தை வேட்டையாட இவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெகுவிரைவில் அவர்கள் இந்த அரசுக்கு தக்கபாடமொன்றைக் கற்பிப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.