இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டோனிக்கு முக்கியம்டெஸ்ட் தொடரில் இலங்கையை நிமிர விடாமல் புரட்டியெடுத்த இந்திய அணிக்கு ஒரு நாள் தொடர் அவ்வாறு எளிதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் 50 ஓவர் வடிவலான போட்டியில் இலங்கை வலுவான அணியாகும். அதனால் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆடுவார்கள்.
இந்திய அணியில் யாரை களம் இறக்குவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. லோகேஷ் ராகுல் 4–வது வரிசையில் பேட் செய்வார் என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெளிவுப்படுத்தி விட்டதால் மனிஷ் பாண்டே, ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். இதே போல் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதால் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு கிட்டும். விக்கெட் கீப்பர் 36 வயதான டோனிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமாகும். இதில் அவர் ஜொலிக்க தவறினால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2019–ம் ஆண்டு உலக கோப்பைக்கான அணியை அடையாளம் காண்பதில் தேர்வு குழு தீவிரம் காட்டுவதால், டோனியின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கைக்கு புதிய கேப்டன்சமீபத்தில் இலங்கை அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2–3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தாரை வார்த்ததால் கேப்டன் பதவியை மேத்யூஸ் துறந்தார். இதையடுத்து புதிய கேப்டன் உபுல் தரங்கா தலைமையில் இலங்கை அணி இந்த தொடரில் கால்பதிக்கிறது. டெஸ்ட் போட்டி சோகத்தில் இருந்து விடுபட்டு, ஒரு நாள் தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்கு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். மலிங்காவின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
கடைசியாக இவ்விரு அணிகளும் ஜூன் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் சந்தித்த போது இந்தியா நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கை இலங்கை அணி ‘சேசிங்’ செய்து மிரட்டியது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி தங்களுக்கு நிறைய நம்பிக்கை அளித்திருப்பதாகவும், டெஸ்ட் தோல்வியை மறந்து ஒரு நாள் போட்டியில் சாதிக்கும் ஆவலில் உள்ளதாகவும் இலங்கை கேப்டன் தரங்கா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
2019–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் இந்த தொடரில் இலங்கை அணி குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. அப்போது தான் தரவரிசையில் 8–வது இடத்தை தக்க வைக்க முடியும். அதனால் இலங்கை வீரர்கள் முழு உத்வேகத்துடன் போராடுவார்கள்.
மைதானம் எப்படி?டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கியுள்ள இந்திய அணியின் வீறுநடைக்கு இலங்கை அணி அணை போடுமா? அல்லது அடங்கிப்போகுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். 2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே மைதானத்தில் தான் விராட் கோலி தனது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியது நினைவு கூரத்தக்கது.
தம்புல்லா மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 17 ஆட்டங்களில் விளையாடி 9–ல் வெற்றியும், 8–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதில் இலங்கைக்கு எதிராக இங்கு 11 ஆட்டங்களில் பங்கேற்று 4–ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.
ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என்று தெரிகிறது. ஆனால் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: குணதிலகா, டிக்வெல்லா, குசல் மென்டிஸ், தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், கபுகேதரா, ஹசரங்கா, திசரா பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ அல்லது சமீரா, மலிங்கா, லக்ஷன் சன்டகன் அல்லது அகிலா தனஞ்ஜெயா.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
போட்டி அட்டவணை
தேதி ஆட்டம் இடம்
ஆக.20 முதலாவது ஒரு நாள் போட்டி தம்புல்லா
ஆக.24 2–வது ஒரு நாள் போட்டி பல்லகெலே
ஆக.27 3–வது ஒரு நாள் போட்டி பல்லகெலே
ஆக.31 4–வது ஒரு நாள் போட்டி கொழும்பு
செப்.3 5–வது ஒரு நாள் போட்டி கொழும்பு
(குறிப்பு: அனைத்து ஆட்டங்களும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்)
இலங்கை மண்ணில் இந்தியா இதுவரை….
இந்திய அணி இலங்கை மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடுவது இது 8–வது முறையாகும். இதுவரை அங்கு அந்த அணியுடன் மோதிய போட்டிகளின் முடிவுகள் வருமாறு:–
ஆண்டு போட்டி முடிவு
1985 3 டிரா (1–1)
1993 3 இலங்கை வெற்றி (2–1)
1997 3 இலங்கை வெற்றி (3–0)
2006 3 டிரா (0–0)
2008 5 இந்தியா வெற்றி (3–2)
2009 5 இந்தியா வெற்றி (4–1)
2012 5 இந்தியா வெற்றி (4–1)
2017 5 ???
சாதனை புள்ளி விவரம்
இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை 150 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 83–ல் இந்தியாவும், 55–ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவு இல்லை. இவற்றில் இருந்து சில சாதனை புள்ளி விவரங்கள் வருமாறு:–
அணி அதிகபட்சம்: இந்தியா–414/7 (ராஜ்கோட், 2009), இலங்கை–411/8 (ராஜ்கோட், 2009)
குறைந்தபட்சம்: இந்தியா–54 ரன் (சார்ஜா, 2000), இலங்கை–96 ரன் (சார்ஜா, 1984)
அதிக ரன்கள் குவித்தவர்: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)– 3,113 ரன் (84 ஆட்டம்), சனத் ஜெயசூர்யா (இலங்கை)– 2,899 ரன் (89 ஆட்டம்)
தனிநபர் அதிகபட்சம்: ரோகித் சர்மா (இந்தியா)– 264 ரன் (கொல்கத்தா, 2014), ஜெயசூர்யா (இலங்கை)–189 ரன் (சார்ஜா, 2000)
அதிக சதங்கள் அடித்தவர்: தெண்டுல்கர் (இந்தியா)–8 சதம், ஜெயசூர்யா (இலங்கை)– 7 சதம்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்: முரளிதரன் (இலங்கை)– 74 விக்கெட் (63 ஆட்டம்), ஜாகீர்கான் (இந்தியா)– 66 விக்கெட் (48 ஆட்டம்)