இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா கடந்த வியாழக்கிழமை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான டெஸ்மாண்ட் கோட்டின்ஹோவைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். அது மட்டுமல்லாமல் இருவரும் தொடர்ந்து தமிழகத்தில் வாழ முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியாக இருந்தவர் ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் இயக்குநர் திவ்யா பாரதி. “எனக்கும் ஷர்மிளா தோழருக்குமான நட்பு ‘கக்கூஸ்’ ஆவணப் படம் மூலம் சாத்தியமானது” என்று சொல்லும் திவ்யா பாரதி, இந்தத் திருமணம் தொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொண்டவை:
அறிமுகமான உறவு
“டெஸ்மாண்ட் கோட்டின்ஹோ, மனித உரிமை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க பெங்களூருவுக்கு 2014-ம் ஆண்டு வந்துள்ளார். அப்போதுதான் முதன்முதலில் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் குறித்து அவர் அறிந்தார். மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக 2000-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஷர்மிளாவின் போராட்ட முறை அவரை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் கடிதப் போக்குவரத்து வாயிலாக இருவருக்குமான நட்பு வலுப்பெற்றது. அதன் பின்பு டெஸ்மாண்ட் தன்னுடைய விருப்பத்தை இரோம் ஷர்மிளாவிடம் தெரிவித்தார்.
ஆனால், போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஷர்மிளா தன்னுடைய மக்களுக்கு நீதி கிடைத்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய போராட்டத்தை அரசியல் வழியாகத் தொடர முடிவெடுத்த ஷர்மிளா, சுமார் 16 ஆண்டுகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடித்துக்கொண்டார்.
நான்கரை கிலோமீட்டர் பயணம்
பின்னர் தன் உடல்நலத்துக்காகவும் அமைதியான சூழ்நிலைக்காகவும் கொடைக்கானலுக்கு டெஸ்மாண்ட் கோட்டின்ஹோவுடன் இரோம் ஷர்மிளா வந்தார். அங்கு அவர்கள் ஒரு வாடகை வீட்டில் வசித்துவருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களின் திருமணத்துக்குச் சில எதிர்ப்புகள் எழுந்து அடங்கின.
அதனாலேயே என்னை அவர் மணப்பெண் தோழியாக இருக்கும்படி அழைத்தார். அவரின் அன்பான அழைப்பு எனக்குக் கிடைத்த பெரிய வெகுமதி. நானும் எங்கள் அமைப்பினரும் கொடைக்கானலுக்கு வந்தபோது, இரோம் ஷர்மிளாவும் டெஸ்மாண்டும் திருமணத்துக்கான எந்த ஆடம்பரமோ அறிகுறியோ இல்லாமல் காலை ஒன்பது மணிக்கு மிக இயல்பாகவும் எளிமையாகவும் வீட்டைவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். சுமார் நான்கரை கிலோ மீட்டர் நடந்தே பதிவாளர் அலுவலகத்துக்கு அவர்கள் வந்தனர்.
அம்மா தெரிவித்த வாழ்த்து
இரோம் ஷர்மிளாவுக்கும் டெஸ்மாண்டுக்கும் இந்திய சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்காக டெஸ்மாண்ட் இரண்டு தங்க மோதிரங்களை மட்டுமே வாங்கியிருந்தார். புது உடைகள், மண்டபம், சிறப்பு உணவு ஏற்பாடு போன்ற எந்த ஆடம்பரமான விஷயங்களும் அவர்களின் திருமணத்தில் இல்லை. மாலை, பூங்கொத்து போன்றவற்றை மட்டும் நாங்கள் ஏற்பாடு செய்தோம்.
உடல்நலம் காரணமாக ஷர்மிளாவின் அம்மா திருமணத்துக்கு வர முடியவில்லை. திருமணம் முடிந்த பிறகு ஷர்மிளா தன்னுடைய அம்மாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆசிபெற்றார். அவருடைய அம்மா வாழ்த்து தெரிவித்த தருணத்தில், ஷர்மிளா நெகிழ்ச்சியாகக் காணப்பட்டார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் நடந்தே வீட்டுக்குத் திரும்பலாம் என ஷர்மிளா கூறினார். ஆனால், நாங்கள்தான் அவரை வற்புறுத்தி காரில் அழைத்துச் சென்றோம்.
ஐரோப்பா செல்லும் ஷர்மிளா
இப்போது வெளியூர் செல்லும் திட்டம் எதுவும் ஷர்மிளாவுக்கும் டெஸ்மாண்டுக்கும் இல்லை. அடுத்த மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறும் ஒரு மாநாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர், இதர வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
இரோம் ஷர்மிளாவுக்கு விசா கிடைத்தவுடன் இருவரும் ஐரோப்பா செல்கிறார்கள். ஆனால், தங்களுடைய குடும்ப வாழ்க்கையைத் தமிழகத்தில் தொடரத்தான் திட்டமிட்டு இருக்கிறார்கள்” என்றார் திவ்யா பாரதி.
“திருமணம் முடிந்ததும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது எங்கள் வாழ்க்கையல்ல. இந்தச் சமூகத்தில் எளிய மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்தனை தாக்குதலுக்கும் எதிராக எப்போதும் எங்களின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்” என்பதுதான் இரோம் ஷர்மிளா, டெஸ்மாண்ட் கோட்டின்ஹோ இருவரும் விடுத்த மணநாள் செய்தி.