தனது வீட்டின் செல்லப்பிராணி மாத்திரமே பொலிஸ் விசாரணைகளில் இருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூட்டுஎதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மனி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச ஆகியோரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டமை தொடர்பிலான முன்னாள் ஜனாதிபதியின் கருத்தை கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் வினவியுள்ளனர்.
“என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, இன்னும் டொமியாவிடம் (செல்லப் பிராணியான நாய்) மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் அனைத்தும் முறையான அரசியல் பழி வாங்கலின் ஒரு பாகமாக இருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.