ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் தண்டனைக் கைதிகள் பொதுவாக 14 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்படுவது வழக்கம். எனினும், முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை 28 ஆண்டுகளாகியும் விடுதலை செய்வதற்கு இந்திய மத்திய அரசாங்கம் மறுத்து வருகிறது.
இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தனக்கு விடுதலை கிடைக்காது என்பதால், சிறையிலேயே, உயிர்துறக்கப் அனுமதி வழங்கும்படி, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதத்துக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உணவு எதையும் உட்கொள்ளாமல், முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று அவரது உண்ணாவிரதம் நான்காவது நாளாக தொடர்கிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க முன்னரே, முருகன், பல வாரங்களாக, ஒரு நேர உணவையும், பின்னர் தனியே பழங்களையும் மாத்திரம் உட்கொண்டு வந்தார்.
தற்போது அவர், எதையும் உண்ணாமல் உயிர் துறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில், முருகனை வேலூர் அரசு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.