இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை சந்தித்து இக்கட்டான நிலையில் உள்ளதையடுத்து இலங்கை அணி ரசிகர்கள் நேற்றைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கேள்லியுற்ற குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு மேற்கிந்தியத்தீவுகளில் இருந்து வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
குறித்த காணொளியில் சங்கா தெரிவித்திருப்பதாவது,
“ எனது தாய்நாடான இலங்கை ரசிகர்களுக்கு நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன். நீங்கள் கிரிக்கெட் தொடர்பில் எந்தளவு தூரம் ஆதரவு வழங்குகின்றீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இலங்கை அணி வெற்றி பெற்றபோது நீங்கள் எம்மோடு இணைந்து வெற்றியை கொண்டாடினீர்கள், இலங்கை அணி தோல்வியில் துவண்டபோது நீங்கள் எம்மோடு இணைந்து தோல்வியில் பங்கெடுத்தீர்கள்.
எமது அணி தடுமாறும் இந்தத் தருணத்தில் உங்களது அன்பும் ஆதரவும் எமது வீரர்களுக்கு தேவையாகவுள்ளது. உங்களது அன்பு மற்றும் ஆதரவு தான் எமது வீரர்களின் பலம்.
எமது அணி வெற்றி பெறும் என நாம் அனைவரும் உறுதி கொள்வோம். அத்தோடு ஒருவரை ஒருவர் ஆதரிப்போம்” என அக்காணொளியில் சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.