300 மில்லியன் பெறுமதியான வீடு கொள்வனவு! சிக்கலில் மஹிந்தவின் மனைவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் 300 மில்லியன் ரூபா பணம் செலவிட்டு ஆடம்பர வீடு ஒன்று கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sernte-02-1-520x300

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட விசாரணைக்கான அறிக்கை தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 7, டொரிங்டன் அவனியூ, இலக்கம் 260/12 என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டினை கொள்வனவு செய்த முறை தொடர்பில் தகவல் வெளியிட ஷிரந்தி தவறியுள்ளார்.

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடு மற்றும் காணியை கொள்வனவு செய்த சம்பவத்துடன், லொக்குவித்தான என்ற நபர் ஒருவரும் தொடர்புப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த வீட்டினை கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளும் போது அந்த சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக தமது உறவினரான வர்த்தகர் தில்ஷான் விக்ரமசிங்கவின் குடும்பத்திடம் கடன் பணமாக பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச 2000ஆம் ஆண்டு தங்கியிருந்த இந்த வீடு, ராஜபக்சர்களின் சிரிலிய சவிய, நீலப்படை மற்றும் தருனயன்ட ஹெடக் ஆகிய அமைப்புகளின் விலாசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீடு தற்போது களஞ்சிய அறையாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.