கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களில் 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா என்பவரும் பலியாகி இருந்தார்.
எதிர்வரும் 24ம் திகதி ஓராண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சசோதரி கிருஷாந்தனி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
இந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
எமது கலாச்சாரத்தின்படி ஒரு குழந்தை பிறக்கும் போது சடங்குகள் நடத்தப்படுகின்றது. இவ்வாறான சடங்குகள் தாய் மாமாவால் நடத்தப்படுகின்றன. ஆனால் அப்படியான எந்தவொரு சடங்கினையும் நாங்கள் செய்யவில்லை.
என் குழந்தையை பார்க்கும் போது, உயிரிழந்த எனது சகோதரனின் செயற்பாடுகளை காணமுடிந்தது. அவரே கண் முன் தோன்றியதாக உணர்வு ஏற்பட்டது. சகோதரனின் உற்சாகம், குறும்புத்தனம் மற்றும் சில முகபாவங்களை குழந்தையிடம் காண முடிந்தது.
சகோதரனின் இழப்பினால் ஏற்பட்ட வலியை குழந்தை பிறந்ததன் மூலம் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர் என் குழந்தையின் வடிவில் எங்களுக்கு திரும்பி வந்தார் என நினைத்தேன்.
குழந்தைக்கு பெயரிடும் சந்தர்ப்பம் வரும் போது இந்துஷன் என அழைக்க தீர்மானித்தோம். எனது குழந்தை தனது மாமாவை சந்திக்கவில்லை, எனினும் அவரின் நினைவாக இருக்க வேண்டும் என இந்துஷன் என்று பெயர் வைத்தோம் என கிருஷாந்தனி மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை உயிரிழந்த ஐந்து இளைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதற்கமைய அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அவர்கள் உயிரிழந்த கடற்கரைக்கு சென்று அவர்களை நினைவு கூரவுள்ளனர்.
5 மெழுகுவர்த்திகளை ஏற்றி 5 பேரையும் ஒன்றாக நிறைவு கூர நான்கு குடும்பத்தினரும் எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற ஐந்து தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த அனர்த்தத்தில் 22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும்.