எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என சீனா அறிவித்துள்ளது.
தங்களையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “சீனாவின் மிக சிறந்த நண்பன் இலங்கை. இரு நாடுகளுக்கும் இடையில் 70 ஆண்டுகளாக நட்பு தொடர்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவியில் அதிகளவு பங்கை இலங்கைக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தென்னிலங்கையில், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க சீனா உதவும்.
இலங்கை, சீனா நட்புறவு சங்கத்தின் மூலம், 1300 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புகளை சீனா வழங்குகின்றது. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் 2000 ஆக அதிகரிக்கப்படும்.
இதேவேளை, ஷங்காய் நகரத்தைப் போன்று இலங்கையின் தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா தொடர்ந்தும் உதவிகளை செய்யும்”
எவ்வாறாயினும், எதிர்வரும் 15 ஆண்டுகளில் இலங்கையை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.