2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எந்த வொரு நாடும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதல் கட்டமாக ஐ.சி.சியின் உலக லெவன் அணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு 3 டி20 போட்டிகளை விளையாடவுள்ளது.
லாகூரில் நடைபெறவுள்ள குறித்த போட்டிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், செப்டம்பர் மாதம் இலங்கை அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தான் நாட்டில் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்த போட்டிகள் பரபரப்பாக அமையும் என்பதோடு பலத்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை பாகிஸ்தான் செல்லவுள்ள உலக லெவன் அணியில் இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.