மாணவர்களுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம்

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

un

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 81 நாட்களாக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாக கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் போராட்டம் எனும் போர்வையில் எமது கலாச்சார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, மாணவர்களின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

மாணவர்களினால் கிழக்கு பல்கலைகழக நிர்வாக கட்டடம் இரவோடு இரவாக முற்றுகையிடப்பட்ட பின்னர் பல்கலையின் உபவேந்தர் மற்றும் பிரதி உபவேந்தர் பலர் இரவு முழுதும் நிர்வாகக் கட்டடத்திற்குள் முடங்கியருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் உடனடியாக நிர்வாகக் கட்டடத் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் இதன்போது நிர்வாக உத்தியோகத்தர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

un2