கொஸ்கொடை – வத்துருவெல பிரதேசத்தில் இரவு முழுவதும் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவரின் மனைவி உட்பட 4 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இறந்த நபரை சந்தேக நபர்கள் விடிய விடிய தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் சந்தேக நபர்களின் வீட்டில் நாற்காலி ஒன்றில் காணப்பட்ட நிலையில் கடந்த 30 ஆம் திகதி காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இறந்த நபரின் கை, கால்களை கட்டி வைத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் உடலில் பல இடங்களில் வீக்கம் காணப்பட்டதுடன் அவை நீல நிறமாக மாறியிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் பிறந்த ஒன்றரை வயதான மகள் இருப்பதாகவும் குடும்ப சண்டை காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி பெண்ணின் தந்தை மகளிடம் இருந்து பிரிந்து வாழும் மருமகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு அமைய இறந்த நபர், கொஸ்கொடையில் உள்ள மனைவியில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.