ஜெயலலிதா மர்மம்! – யார் அந்த 17 பேர்? தற்போது அரசு செவி சாய்ப்பதற்குக் காரணம்…!

‘மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்ட போது செவிடாய் இருந்த அரசு இப்போது செவி சாய்ப்பதற்குக் காரணம் அரசியல்.

70th Independence Day celebration at Chennai

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் எனச் சொல்லி பலரையும் கைது செய்தார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’’ என்றார். சி.பி.ஐ. விசாரணை கோரி மக்களவையில் ஓ.பி.எஸ். எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவின் தோழி கீதாவும் இந்த விவகாரத்தை எழுப்பினார். பிரதமரிடமே நேரில் போய்ப் புகார் கொடுத்தார் நடிகை கெளதமி. ‘`ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கும் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா சமாதியைத் தோண்டி எடுத்து உடலைப் பரிசோதனை செய்யவும் தயங்க மாட்டேன்’ என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.

இப்படி ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டபோதெல்லாம் கவனத்தைத் திருப்பாதவர்கள், மேலூரில் தினகரன் கூட்டிய கூட்டத்துக்குப் பிறகு, ஜெயலலிதா இறந்து எட்டு மாதங்கள் கழித்து, திடீர் ஞானோதயம் பெற்று விசாரணை கமிஷன் அமைப்போம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், யாரெல்லாம் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்பதுதான் இணைப்புகளைத் தாண்டி அ.தி.மு.க-வுக்குள் அதிகம் பேசப்படும் சூடான விடயங்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் என ஜெயலலிதாவுடன் சம்பந்தப்பட்டவர்களில் 17 பேர் மிக முக்கியமானவர்கள். அவர்கள்தான் விசாரணை கமிஷனில் முதன்மையாக விசாரிக்கப்பட இருப்பவர்கள்.

1. பிரதாப் ரெட்டி (நிறுவனர் – அப்போலோ மருத்துவமனை)

அப்போலோவில் ஜெயலலிதா 75 நாள்கள் இருந்த போது, அத்தனை விஷயங்களையும் அறிந்தவர். மருத்துவம் தொடர்பான எல்லா முடிவுகளையும் முன்னின்று எடுத்தவர் பிரதாப் ரெட்டி. ‘காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு’ முதல் ‘ஜெயலலிதா டி.வி. பார்த்தார், தயிர் சாதம் சாப்பிட்டார்’ வரையில் ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தது அப்போலோ.

அப்போலோ வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் விசாரணை கமிஷன் முன்பு வரும்போது, அதற்கு விளக்கம் கொடுக்கப் பொறுப்பானவர் பிரதாப் ரெட்டிதான். மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டது அப்போலோ. அந்த நேரத்தில் ஒரே ஒரு செய்தியாளர் மாநாடு மட்டும் நடத்தினார்கள்.

படப்பிடிப்பாளர்களை மட்டுமே அனுமதித்து டாக்டர்கள் சொன்ன விளக்கம் மட்டுமே பதிவு செய்ய அனுமதித்தனர். கேள்விகள் எழுப்பப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அப்போது செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணமடைந்து 60 நாள்கள் கழித்து தான் மீடியா முன்பு அப்போலோ நிர்வாகம் விரிவாகப் பேசியது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஊடகங்களிடம் அப்போலோ ஏன் விரிவாக பேசவில்லை. அவர்களை யார் தடுத்தது? என்கிற கேள்விகள் எல்லாம் விசாரணை கமிஷன் முன்பு வரலாம்.

நோய்த்தொற்றுக்காகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் மூலம், நோய்த்தொற்று முற்றிலுமாகக் குணமாகியுள்ளது. முதல்வரின் விருப்பப்படி வேறு வார்டுக்கு மாற்றப்படுவார்’’ எனச் சொன்னார் பிரதாப் ரெட்டி. அதன்பிறகு ‘‘முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டுள்ளார்; அவர் எழுந்து நடப்பதுதான் அடுத்த நிலை’’ என்றார்.

இன்னொரு முறை ‘‘டிஸ்சார்ஜ் எப்போது என்பதை முதல்வரே முடிவெடுப்பார்’’ என்கிற விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டார். அதிகாரம் செலுத்தும் தலைவியாக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போலோவிலும் டாக்டர்களின் அதிகாரத்தை, தான் எடுத்துக்கொண்டு டாக்டர்களையும் கட்டுப்படுத்தியிருக்கிறாரே எனக் கட்சியினர் வியந்தார்கள். இந்த வியப்புக்கு கமிஷனில் விடை கிடைக்குமா என்பது ரெட்டியிடம் நடக்கும் குறுக்கு விசாரணையில் தெரியலாம்.

2. டாக்டர் பாபு கே. ஆபிரகாம் (அப்போலோ மருத்துவனை)

மணிப்பாலின் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்த பாபு கே.ஆபிரகாம், நுரையீரல் நோய் சிகிச்சையில் எக்ஸ்பெர்ட். கனடா டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவத்தில் பயிற்சி பெற்ற ஆபிரகாம், தீவிர சிகிச்சைப்பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். அப்போலோவில் நுரையீரல் நோய்ப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்து சிகிச்சை அளித்த டாக்டர்களில் முக்கியமானவர். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது வாய் திறக்காத ஆபிரகாம், அவர் மறைவுக்குப் பிறகு நடந்த கூட்டு பிரஸ்மீட்டில்தான் பேசினார். ‘‘முதல்வர் டி.வி. பார்த்தார், தயிர்சாதம் சாப்பிட்டார்.

மாரடைப்பு ஏற்படும் வரையில் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். மாரடைப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்க முடியாது. ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருந்திருந்தால், ஜெயலலிதா ஒரு வாரத்தில் வீடு திரும்பியிருப்பார்’’ என்றார்.

ஜெயலலிதாவுடன் அவரின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களுடன் தினமும் ஜெயலலிதா உரையாடி வந்தார். சசிகலா மட்டும்தான் ஜெயலலிதாவுடன் இருந்து வந்தார் எனக் கூறுவது உண்மையல்ல. அவருடன் பேசிவந்த குடும்பத்தினர் அனைவரையும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவிடம் கேட்டுவிட்டுத்தான், அவர் சரி என்றால் அவர்களை அனுமதிப்போம்’’ என ஆபிரகாம் சொன்னார்.

ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சசிகலாவைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதுதான் பலரும் சொன்ன செய்தி. ஆளுநர், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தனர். நோய்த்தொற்றால் உள்ளே அனுமதிக்கவில்லை என்றுதான் எல்லோருமே சொன்னார்கள். ஆனால், ஆபிரகாம் இப்படிச் சொன்னது ஏன்? யாரைத் திருப்திப்படுத்த இப்படிச் சொன்னார் எனத் தெரியவில்லை.

இதேபோல்தான், ‘`ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றி சசிகலா, தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்கள், நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் தினமும் விளக்குவோம்’’ எனவும் சொல்லியிருக்கிறார். விசாரணையின்போது மருத்துவம் தொடர்பான கேள்விகள் மட்டுமில்லாது அரசியல் சார்புக் கேள்விகளுக்கும் ஆபிரகாம் பதில் சொல்ல வேண்டி வரலாம்.

3. டாக்டர் பாலாஜி

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வழங்கப்படும் பார்ம் பி-யில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதா கைரேகைதான் வைத்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியபோது அரசு டாக்டர் பாலாஜி சாட்சியாக இருந்தார் என பார்ம் பி-யில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கும்போது டாக்டர் பாலாஜி அங்கே இல்லை ஜெயலலிதாவைப் பார்க்காமலேயே பாலாஜி சாட்சிக் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்தக் கைரேகையும் ஜெயலலிதாவுடையதா என்பதில் சந்தேகம் உள்ளது’’ என்றெல்லாம் அப்போது சர்ச்சை கிளம்பியது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, டாக்டர் பாலாஜிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததற்கான ஆவணம் சிக்கியது. கைநாட்டுக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டதற்காகத் தரப்பட்ட சன்மானம் இது என விவகாரம் இன்னும் பெரிதானது.

உடனே பாலாஜி, ‘`லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், ஹோட்டலில் தங்குவதற்காக அந்தப் பணம் பெறப்பட்டது’’ என பேட்டி அளித்தார். ஆனால், அடுத்தநாளே ‘`பேட்டி கொடுக்கவில்லை. யாரிடமும் எந்தப் பணத்தையும் கட்டணமாக பெறவில்லை’’ என அறிக்கைவிட்டு பல்டி அடித்தார்.

ஜெயலலிதா கைநாட்டு வைக்கும் நிலையில்தான் இருந்தாரா, அந்த நாளில் பாலாஜி எங்கே இருந்தார், கைநாட்டு வாங்கியபோது ஜெயலலிதா எப்படி இருந்தார்? என நிறைய கேள்விகளை பாலாஜியிடம் விசாரிப்பார்கள். எம்.எஸ் படித்த பாலாஜி சென்னை அரசு மருத்துவக்கல்லூரியின் பேராசிரியராகவும் ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் டாக்டராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பொது அறுவைசிகிச்சைப்பிரிவில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர்.

4. ஜெ. ராதாகிருஷ்ணன் (சுகாதாரத்துறைச் செயலாளர்)

மருத்துவமனைகள் அனைத்தும் சுகாதாரத் துறையின் கன்ட்ரோலில்தான் வரும். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தபோது சுகாதாரத்துறை முக்கிய ரோல் வகித்தது. பெரும்பாலான நேரங்களில் ராதாகிருஷ்ணன் அப்போலோவில்தான் இருந்தார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க வி.ஐ.பி-க்கள் வந்தபோதெல்லாம் அவர்களை அப்போலோவில் ரிசீவ் செய்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப்பற்றி அவர்களுக்குச் சொன்னவர் ராதாகிருஷ்ணன். அப்போலோ நடத்திய பிரஸ்மீட்டின்போது ராதாகிருஷ்ணனும் இருந்தார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கைகளை எல்லாம் சேர்த்துத் தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையைத் தயாரித்தவர் ராதாகிருஷ்ணன்தான். எய்ம்ஸ் அறிக்கையை டெல்லியில் இருந்து பெறுவதில் முக்கியப் பங்கு எடுத்தவரும் அவரே. ராதாகிருஷ்ணன் விசாரணைக் கமிஷனில் என்ன சொல்வார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க-வின் இரத்தத்தின் இரத்தங்கள்.

5. சி.விஜயபாஸ்கர் (சுகாதாரத்துறை அமைச்சர்)

ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனச் சொன்னேன். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார்’’ என ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின்போது, பன்னீர்செல்வம் சொன்னார். உடனே விஜயபாஸ்கர், ‘`விசாரணை கமிஷன் வைத்தால், விசாரிக்கப்படும் முதல் நபர் ஓ.பி.எஸ்-ஸாகத்தான் இருப்பார்’’ என்றார்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்த்தாரா? ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் வைத்தால், விஜயபாஸ்கரும் சிக்குவார்’’ என நத்தம் விசுவநாதனும் முழங்கினார். இப்போது எல்லோரும் ஒன்றாக இணைந்து விட்டார்கள்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். அந்த வகையில் விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கரும் இருப்பார். சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவாளராகச் சொல்லப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர், ‘`ஒரு ஆல் ரவுண்டர். எல்லா தொழிலையும் செய்பவர்’’ எனப் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். இந்த ஆல்ரவுண்டர் விசாரணை கமிஷன் முன்பு என்ன சொல்லப் போகிறார் என்பது சசிகலா குடும்பம் அறிந்ததுதான்.

6. டாக்டர் சிவக்குமார் (சசிகலா உறவினர்)

அப்போலோவில் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை தொடர்பான அத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்தவர் சசிகலாவின் அண்ணன் மருமகனான டாக்டர் சிவக்குமார். அப்போலோவில் பிளாஸ்டிக் சர்ஜனாகப் பணியாற்றிய சிவக்குமார்தான் ஜெயலலிதாவுக்கு குடும்ப டாக்டராக இருந்து வீட்டிலேயே சிகிச்சை அளித்தார். அந்த 75 நாள்களும் அப்போலோவில் ‘ஆல் இன் ஆல்’ என வலம் வந்த சிவக்குமாருக்கு அதன்பின் பெரிய மரியாதை இல்லாமல் போய்விட்டது.

ஆரம்பத்தில் அப்போலோ நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தலை காட்டியதோடு சரி. அதன்பின் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் கிடத்தப் பட்டபோது அருகில் நின்று கொண்டிருந்தார். ஆனால்,அதன்பின் சிவக்குமார் என்ன ஆனார் என்பதே தெரியாத அளவுக்குத் தன் இருப்பை மறைத்துக் கொண்டார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்குள் கொண்டுவருவதற்கு முன்பு வரை தரப்பட்ட சிகிச்சைகள், அப்போலோவில் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என எல்லாம் அறிந்தவர் சிவக்குமார்.

7. ரிச்சர்ட் பியெல் (லண்டன் மருத்துவர்)

செப்டிசீமியா, பாக்டீரியாத் தொற்றால் ஏற்படும் பாதிப்பு, வென்ட்டிலேஷன், ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் செயல் இழந்தவர் களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ரிச்சர்ட் பியெல். லண்டனின் புகழ்பெற்ற செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வரும் ரிச்சர்ட் பியெல் செம காஸ்ட்லி டாக்டர்.

ஆட்சிக்கட்டிலில் சசிகலாவை அமர வைப்பதற்காக கூவத்தூர் கூத்து நடந்தபோது, அப்போலோ டாக்டர்களையும் ரிச்சர்ட் பியெல்லையும் அழைத்துவந்து பிரஸ் மீட்டை நடத்தியது தமிழக அரசு. மரணத்தின் சர்ச்சையை விளக்குவதற்காகவே இந்த பிரஸ்மீட்டில் பங்கேற்க லண்டனில் இருந்து வந்தார் ரிச்சர்ட்.

ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்ததில் முக்கிய பங்கு வகித்த ரிச்சர்ட் பியெல் விசாரணை கமிஷன் முன்பு ஆஜர் ஆவாரா? அல்லது வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவாரா எனத் தெரியவில்லை.

8, 9,10. நிதிஷ் நாயக், அஞ்சன் த்ரிகா, ஜி.சி. கில்நானி (எய்ம்ஸ் மருத்துவர்கள்)

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ் டாக்டர்களான இவர்கள் மத்திய அரசு சொல்லித்தான் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்க அப்போலோ வந்தார்கள். மரணம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டபோது அதுபற்றி எய்ம்ஸ் மருத்துவமனை, விரிவான அறிக்கையை வெளியிட்டது. இவர்கள் விசாரணைக்கு வந்து ஆஜர் ஆவது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது.

11. சசிகலா

ஜெயலலிதாவை 33 ஆண்டுகள் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்ட சசிகலாதான், மருத்துவமனையிலும் பார்த்துக்கொண்டார். ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் செப்டம்பர் 22-ம் தேதி என்ன நடந்தது என்பதை அறிந்த நபர். சிறையில் இருக்கும் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவோ விசாரணை நடத்தப்படலாம்.

12. தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகச் சேர்க்கவிடாமல் தடுக்க முயன்ற தினகரனை கார்டனில் இருந்து 2007-ம் ஆண்டு விரட்டி அடித்தார் ஜெயலலிதா. அப்போது முதல் அவர் ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை.

ஆனால், தினகரன் ‘`ஜெயலலிதாவை அப்போலோவில் பார்த்தேன். என்னைப்பார்த்து ஜெயலலிதா கையசைத்தார்’’ என்றெல்லாம் கதை சொன்னார். சசிகலாவின் வலதுகரமாகச் செயல்பட்ட தினகரன் விசாரணையில் மிக முக்கியமான சாட்சியமாக இருப்பர்.

13. ஓ.பன்னீர்செல்வம்

சிகிச்சையில் ஜெயலலிதா இருந்தபோது பொறுப்பு முதல்வராகவும் அவர் இறந்தபிறகு சில வாரங்கள் முதல்வராகவும் இருந்தவர் பன்னீர்செல்வம். விசாரணையில் பன்னீர் சொல்லப்போகும் பகீர் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவின் துறைகளைச் சேர்த்துக் கவனித்தவர்; ஜெயலலிதாவின் சிகிச்சைத் தொடர்பான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். அப்போது அவரை யார் தடுத்தார்கள்? வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை எடுத்திருக்க வேண்டும் என இப்போது சொல்லும் பன்னீர், அப்போது அப்போலோ ஆஸ்பத்திரிக்கு வந்த கவர்னர் வித்யாசாகர் ராவிடமோ மத்திய அமைச்சர்களிடமோ சொல்லியிருக்கலாம்.

ஏன் அவர் முதல்வராக இருந்த கொஞ்ச காலத்திலாவது விசாரணை கமிஷனை நியமித்திருக்க முடியும். அல்லது மத்திய அரசின் செல்வாக்கைப் பெற்ற பன்னீர் சி.பி.ஐ. விசாரணையைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் செய்யாத பன்னீர்தான் இப்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட முதல் காரணம். மீண்டும் துணை முதல்வராகிவிட்ட ஓ.பி.எஸ். விசாரணை கமிஷனின் முன்பு சசிகலாவுக்கு எதிராகப் பல உண்மைகளைப் பன்னீர் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

14. ராம மோகன ராவ்

தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவுக்கு ஹாஸ்பிட்டல் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் தெரியும். தலைமைச் செயலாளர் என்ற முறையில் அவரிடம் அனைத்துத் தகவல்களும் தெரிவிக்கப் பட்டிருக்கும். மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மீடியேட்டராக இருந்தவர். பன்னீருக்கு முதல்வரின் பொறுப்பை ஒப்படைத்தபோது அது தொடர்பாகக் கவர்னரிடம் ஆலோசனை நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.

தமிழக அரசுக்கு ஆதரவானவராக இருந்தவர், சி.பி.ஐ. ரெய்டுக்குப் பிறகு எதிரியானார். காத்திருப்போர் பட்டியலில் இருந்து மீண்டும் டம்மி பதவிக்கு வந்தவர் விசாரணையில் உண்மைகளைச் சொன்னால், அது இந்த வழக்கையே அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்.

15. ஷீலா பாலகிருஷ்ணன்

தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘அரசின் ஆலோசகர்’ என்கிற பதவியில் அமர வைக்கும் அளவுக்கு ஜெயலலிதாவிடம் செல்வாக்குப் பெற்றவர் ஷீலா பாலகிருஷ்ணன். சசிகலாவிடமும்தான். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது அடுத்த முதல்வர் யார்? என்கிற ரேஸில் ஷீலா பாலகிருஷ்ணனின் பெயரும் அடிப்பட்டது.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது சசிகலாவுடன் வலம் வந்தார். நெருக்கமாகவும் இருந்தார். ஆனால், ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனவர் அதன்பிறகு எங்கேயும் தென்படவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலைத் தொடர்பாகவும், அவரது தனிப்பட்ட விஷயங்களை சசிகலாவுக்கு அடுத்தபடியாக நன்கு அறிந்தவர் ஷீலா பாலகிருஷ்ணன்தான்.

16. தீபா

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது அவரைப் பார்க்க பகீரத முயற்சிகளை எடுத்து தோற்றுப்போனவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தது முதல் அவரின் உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டது வரையில் இரத்த உறவுகள் யாரிடமும் தெரிவிக்காமல் சசிகலாவிடம் மட்டுமே டாக்டர்கள் தெரிவித்ததாக சர்ச்சைக் கிளம்பியது.

ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்தது முதல் ஜெயலலிதா உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடியை பெற்றது வரையில் சசிகலாதான் பிரதானமாக இருந்தார். ரத்த உறவான என்னை ஏன் அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதில் துவங்கி பல்வேறு சந்தேகக் கேள்விகளை விசாரணை கமிஷன் முன்பு தீபா வைக்கலாம்.

17. பூங்குன்றன்

ஜெயலலிதாவின் பி.ஏ-வாகப் பல வருடங்கள் இருந்தவர் பூங்குன்றன். சசிகலாவுக்கு அடுத்து ஜெயலலிதாவிடம் அதிக நேரம் பேசக்கூடியவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, போயஸ் கார்டனை நிர்வகித்து வருகிறார். மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்ட அன்றும் அதற்கு முன்பும் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது என்பதைப் பூங்குன்றனிடம் கேட்டால் தெரியும்.

ஜெயலலிதா மர்ம மரணத்தில் மிக முக்கியமான சாட்சி பூங்குன்றன்தான். இவர் மனசாட்சியோடு உண்மைகளைச் சொன்னால், ஜெயலலிதாவின் இறுதிக்காலம் குறித்த பல்வேறு வியூகங்களுக்கு நேரடி பதில் கிடைக்கும்.

விசாரணைக் கமிஷனின் இறுதி அறிக்கையில் ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்பதும், சசிகலா உள்பட அவரது உறவினர்கள் மீது பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பலாம் என்பதுதான் அ.தி.மு.க-வில் பேச்சாக இருக்கிறது.

விசாரணை நீதிபதி யார்?

முதல்வர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் போன்றவர்கள் கொல்லப்பட்ட நேரங்களில் எல்லாம் விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கி, வெடிகுண்டு, போலீஸ், சதி என க்ரைம் பக்கங்கள் மட்டுமே விசாரணை கமிஷனை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், ஜெயலலிதா மரணம் அப்படிப்பட்டது அல்ல.

காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மரணத்தைப்போல ஜெயலலிதா மரணம் நிகழவில்லை. ஜெயலலிதாவை மருத்துமனைக்கு தள்ளிய மையப்புள்ளியை பற்றி விசாரணை ஆணையம் விசாரிப்பது தமிழகத்தில் இதுதான் முதன்முறை. காக்கிச் சட்டைகளையும் அரசு அதிகாரிகளையும் மட்டுமே வைத்து ஜெயலலிதாவின் மரணத்தை விசாரணை கமிஷன் விசாரித்துவிடாது.

தொற்றுநோய், இன்டென்சிவ் கேர், சர்க்கரை நோய், இதயம், டயட், பிசியோதெரப்பி, நுரையீரல், செப்டிசீமியா, லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர் என மருத்துவம் பற்றி விஷயங்கள்தான் விசாரணை கமிஷன் முன்பு முக்கியமாக பேசப்படும். அதனால் மருத்துவ அறிவியல் அறிந்தவர்களும் விசாரணை கமிஷனில் இடம்பெறலாம். அரசுக்கு வேண்டப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைத்தான் நியமிப்பார்கள் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

விசாரணைக்கு உள்ளாகும் டாக்டர்கள்!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற டாக்டர்களிடமும் விசாரணை கமிஷன் நேரில் அழைத்து விசாரிக்கும். நுரையீரல் நிபுணர் நரசிம்மன், விஜயசந்திர ரெட்டி, தொற்றுநோய் நிபுணர் ராமசுப்ரமணியம், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரமேஷ் வெங்கட்ராமன், மயக்கவியல் மருத்துவர் செந்தில்குமார், உடலியல் உட்புற நிபுணர் என்.ராமகிருஷ்ணன், சிங்கப்பூர் பிஸியோதெரப்பி நிபுணர்கள் சீமா ஷர்மா, மேரி ஆகியோரோடு சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர்களான ராஜ மாதங்கி, விக்ரம் ஆகியோரையும் விசாரிப்பார்கள். இப்படி ஜெயலலிதா சிகிச்சையில் பங்கேற்ற 35 டாக்டர்களுக்கும் சம்மன் அனுப்பி வைப்பார்கள்.

காவிரி… உட்டாலக்கடி

காவிரிப் பிரச்னைக்காக அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர் என்ன என்பதெல்லாம் விசாரணை கமிஷன் முன்பு விஸ்வரூபம் எடுக்கலாம்.

போனில் பேசினாரா ஜெயலலிதா?

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவியும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்தபோது ஜெயலலிதா அப்போலோவில்தான் இருந்தார். ‘‘மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் ஜெயலலிதா என்னிடம் பேசி ஆறுதல் சொன்னார்’’ என தெரிவித்தார் விசாலாட்சியின் மகன் மதிவாணன்.

ஆனால், அன்றைக்கு ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லாத போது எப்படிப் பேசினார்? எந்த போனுக்குத் தொடர்பு கொண்டார்? என்பதை எல்லாம் விசாரணை கமிஷன் விசாரிக்கும். அதோடு கால் ஹிஸ்ட்ரி எல்லாம் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

போட்டோ, வீடியோ ஆதாரங்கள் உண்டா?

ஜெயலலிதா அறையில் சி.சி.டி.வி. இல்லை… அப்படியே இருந்தாலும் அவை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சிகிச்சை போட்டோவை வெளியிட முடியாது’’ எனச் சொல்லியிருக்கிறார் ரிச்சர்ட் பியெல். ஆனால், ‘`ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் நிறைய இருக்கிறது. தேவை ஏற்படும்போது அதை வெளியிடுவோம்’’ எனச் சொல்லியிருக்கிறார் திவாகரனின் மகன் ஜெயானந்த்.

மெடிக்கல் கவுன்சில் விதிகளின்படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடவில்லை’’ என சென்னை உயர் நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது அப்போலோ. ‘’சிகிச்சைப் படங்கள், வீடியோ வெளியாவதை ஜெயலலிதா விரும்பவில்லை’’ எனவும் சொன்னது.

ஆனால், அதே அப்போலோவில் சோ, சிவந்தி ஆதித்தன் போன்றவர்கள் சிகிச்சை பெற்றபோது அவர்களைப் பார்க்க ஜெயலலிதா போனார். அப்போது புகைப்படம், வீடியோ எடுக்க அப்போலோ எப்படி அனுமதித்தது என்கிற கேள்விகள் விசாரணை கமிஷன் முன்பு எழுப்பப்படலாம்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டனைச் சுற்றிலும், வீட்டிலும் நிறைய கமராக்கள் உண்டு. செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த கமராக்களில் பதிவான காட்சிகள் விசாரணை முன்பு வைக்கப்பட வேண்டும் எனக் கோரப்படலாம். ஆனால், அந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு தகவல் கார்டன் வட்டாரத்தில் உலவுகிறது.