அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம்.

வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர்.

அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் ஓபராயும் ஒருவர், இவர்களுக்கு ஒரு மிஷின் வருகின்றது. அதில், உலகத்திற்கு தெரியாமல் மூன்று நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர்.

அது தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும், அதே நேரத்தில் இந்த பொறுப்பு அஜித் கையில் வர, நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர்ட் அக்‌ஷரா ஹாசனுக்கு தான் தெரியும்.

அவரை அஜித் கண்டுபிடித்து, அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்து, அவருடைய வாழ்வே திசை மாறுகின்றது. பின் தன் சூழ்ச்சிகளை அஜித் எப்படி முறியடித்தார் என்பதே இரண்டாம் பாதி.

படத்தை பற்றிய அலசல்

அஜித், அஜித், அஜித் என்று ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதையும் தாங்கி செல்கின்றார். அதிலும் தனக்கு கொடுக்கும் மிஷின்களை அவர் கையாளும் விதம், அவரின் மேனரிசம் என ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக மிரட்டுகின்றார். அதிலும், தனக்கான துரோகம் தெரிந்து அவர் தன்னை தயார் படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.

காஜலுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம், படம் முழுவதும் கதையின் ஓட்டத்திலேயே அவருடைய கதாபாத்திரம் பயணிக்கின்றது. அதிலும் தன்னை கொலை செய்ய வருபவர்களை அஜித் தூரத்தில் இருந்து சுடும் காட்சி, அதற்கு காஜல் கொடுக்கும் ரியாக்‌ஷன் சூப்பர்.

ஆனால், அக்‌ஷரா இரண்டே காட்சிகளில் தான் வருகின்றார், அது கொஞ்சம் ஏமாற்றம். மேலும், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பரபரப்பாக இருக்கின்றது. ஆனால், பல விஷயங்கள் ஏ செண்டர் ஆடியன்ஸுகளுக்கே புரிய வாய்ப்பில்லை. மிகவும் படம் அந்நியப்பட்ட உணர்வு.

படத்தின் மிகப்பெரிய பலமே ஸ்டெண்ட் தான், ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கின்றது. அதிலும் அந்த மோட்டர் பைக் சேஸிங் காட்சி விசில் விண்ணை பிளக்கின்றது. கிளைமேக்ஸ் 6 பேக் காட்சி நீங்களே திரையில் பார்த்து கொண்டாடுங்கள்.

வீரம், வேதாளத்தில் ஒரு சில மாஸ் காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம், அப்படி இதில் குறிப்பிடும்படி பெரிதும் இல்லை. மேலும், கிளைமேக்ஸில் காஜலை வைத்து அஜித் மோதும் காட்சி சிவா ஹாலிவுட் மேக்கிங். நம்மூர் மக்களுக்கு ஏற்ற மசாலா வைப்பதில் தடுமாறிவிட்டார்.

க்ளாப்ஸ்

அஜித் ஒன் மேன் ஆர்மி.

வெற்றியின் ஒளிப்பதிவு, இதுவரை தமிழ் சினிமா பார்க்காத தளத்தை காட்டி அசத்தியுள்ளார். சண்டைக்காட்சியில் வெற்றிக்கு தனி அப்ளாஸ் கொடுக்கலாம்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றது.

சண்டைக்காட்சிகள் குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி பெரும் பலம்.

நிறைய காட்சிகளை மக்களுக்கு புரியும் அளவிற்கு சரியாக கட் செய்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

பல்ப்ஸ்

அனைத்து தரப்பினருக்கும் கதை புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.

அக்‌ஷராவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் படத்தின் வேகம் அதிகம், எதிர்ப்பார்த்த விவேகம் கொஞ்சம் குறைவு.