நான்கு தசாப்தங்களின் பின்னர் அங்கோலாவிற்கு புதிய ஜனாதிபதி

அங்கோலாவில் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முறையாக புதிய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்காக அங்கோலா மக்கள் வாக்களித்துள்ளனர்.

ankola

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் ஜனாதிபதியாக பதவிவகித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ், அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அங்கோலாவில் நேற்று (புதன்கிழமை) தேர்தல் நடைபெற்றது.

இம்முறை தேர்தலில் ஜோஸ் எடுவார்டோ டோஸ் போட்டியிடாத நிலையில், அவரது மக்கள் விடுதலை இயக்க கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோயோ லவுரென்கோ போட்டியிட்டுள்ளார். இவருக்கு மிகப்பெரும் சவாலாக அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியத்தின் வேட்பாளர் இசியாஸ் சாமகுவா விளங்குகிறார். எனினும், இவ்வார இறுதியில் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளின்படி மக்கள் விடுதலை இயக்கமே வெற்றிபெறும் என ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடான அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து 1975ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் அந்நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் 1979ஆம் ஆண்டு பதவியேற்றார்.

1979ஆம் ஆண்டு முதல் 2017 வரை 38 ஆண்டுகள் வரை ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதான அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.