இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்நாளை கழித்த பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு பரோல் கோரியிருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் சி.பி.ஐயிடம் அளித்த வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படாததே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் தண்டனை பெறக் காரணம் என வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இதை கூறியிருந்தார். இவர் இந்த சம்பவம் பற்றிக் கூறும் போது,
“பற்றரி எதற்காக வாங்கச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாங்கித் தருமாறு கேட்டார் சிவராசன் வாங்கிக் கொடுத்தேன். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்பதை பேரறிவாளன் பல தடவைகள் கூறினார். ஆனால் இதை நான் அவருடைய வாக்குமூலத்தில் எழுத மறந்து விட்டேன்.”
அதேநேரத்தில் பேரறிவாளன் இதை தெரிந்தே வாங்கினார் என்றும் எழுதவில்லை எனவும் விசாரணை அதிகாரியான தியாகராஜன் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.