ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்பட்ட வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்… அதுபற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை (MDMA) இத்தனை ஆண்டுகளில் நடத்திய விசாரணைகள் என்ன? இதுபற்றி மத்திய அரசு முழுமையான அறிக்கை தரவேண்டும்’’ என இப்போது கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை, கடந்த 23-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. ராஜீவ் மரணம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் தொடுத்த வழக்கில்தான் இப்படிப் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
உண்மையிலேயே அந்த வெடிகுண்டு பற்றிய ரகசியங்களெல்லாம் கண்டுபிடிக்க முடியாதவை இல்லை. ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு சன்னங்களின் சிதறல்கள், துகள்கள், தனு அணிந்திருந்த ஆடைகள், பெல்ட் பாமின் சிதறிய ஜாக்கெட்டுகள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நவீன சோதனைக்கு அனுப்பியது.
ஒன்று, தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணரான பேராசிரியர் சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொன்று ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணரான மேஜர் மாணிக் சபர்வாலிடம் ஒப்படைக்கப்பட்டது.
சந்திரசேகரன் எட்டு மாதங்கள் கழித்து 21.1.1992 அன்று வெடிகுண்டு குறித்த ஆய்வறிக்கையை, சி.பி.ஐ வசம் ஒப்படைத்தார். அதில், ‘ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட பெல்ட் பாமில் சுமார் 400 கிராம் முதல் 600 கிராம் வரையிலான RDX வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பின் தாக்கத்தை அதிகரிக்க சிறுசிறு உயர்ரக இரும்பு குண்டுகள் பொதிக்கப்பட்டிருந்தன’ எனத் தெரிவித்திருந்தார்.
இரண்டே வாரங்களில், சபர்வால் தன் ஆய்வறிக்கையை மத்திய அரசிடமும் சி.பி.ஐ-யிடம் தந்தார். ‘அந்த வெடிகுண்டில் RDX மற்றும் TNT சேர்ந்த வெடிமருந்துக் கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் இருந்த சன்னங்கள் (பால்ரஸ் குண்டுகள்) தனித்தன்மை வாய்ந்தவை. SFG-87 என்ற அமெரிக்கத் தயாரிப்பான மூன்று கையெறி குண்டுகளில் உள்ள மருந்துகளின் அளவுக் கலவை பெல்ட் பாமில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்’ என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேஜர் சபர்வாலின் அறிக்கை, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இதற்குக் காரணம் இருந்தது.SFG-87 என்ற அமெரிக்கத் தயாரிப்பான கையெறி குண்டுகளை, சிங்கப்பூரின் ‘யுனிகான் இன்டர்நேஷனல்’ ஆயுத நிறுவனம் இலங்கைக்கு சப்ளை செய்துகொண்டிருந்தது. SFG-87 ரக கையெறி குண்டுகளில் இருந்த மருந்துக் கலவையே அது.
இந்தப் பாதையில் விசாரணை போவதைச் சிலர் விரும்பவில்லை. அதனால், ஆரம்பத்திலேயே அதன் கதவுகளை அடைத்துவிட்டார்கள். 19.5.92 அன்று இரண்டாவதாக அவர்கள் கேட்டபடி புதிய அறிக்கையைத் தாக்கல் செய்தார் சபர்வால்.
அதே நேரத்தில், சி.பி.ஐ-யின் இயக்குநர் விஜய் கரனிடம், ‘இந்த வெடிகுண்டு விஷயத்தில் இருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க, புதுடெல்லியில் இருக்கும் மத்தியத் தடயவியல் ஆய்வகத்துக்கும், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள FBI சோதனைக்கூடத்துக்கும் இந்த வெடிமருந்துத் துகள்களை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று சபர்வால் கேட்டார்.
அப்படியே அனுப்பியும் வைக்கப்பட்டது. அமெரிக்க FBI ஆய்வுக்கூடம் இரண்டு வாரத்திலேயே அறிக்கையை அனுப்பிவிட்டது. மேஜர் சபர்வால் முதலில் கொடுத்த அறிக்கையை ஒட்டியே, ‘TNT வெடிமருந்து மற்றும் RDX-ன் பிரசன்னம் இருப்பதாக’ இதுவும் சொன்னது. அதோடு, இஸ்ரேலில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, மேலதிக பரிசோதனைகள் மூலம் TNT-யின் இருப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இதையெல்லாம் சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு பொருட்படுத்தவே இல்லை. ஜெயின் கமிஷன் விசாரணையில் இதெல்லாம் வெளிவந்தது. நீதிபதி ஜெயின், முன்பு ஆஜராக வந்த கார்த்திகேயனிடம் இதையெல்லாம் சுட்டிக்காட்டி, ‘‘FBI கொடுத்த அறிக்கையை ஏன் ஏற்கவில்லை… அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல் இஸ்ரேலின் ஆய்வுக்கூட சோதனைக்கு ஏன் உட்படுத்தவில்லை’’ என்று சாடுகிறார்.
இன்று உச்ச நீதிமன்றம் கேட்கும் கேள்விக்கு விடை தேட வேண்டும் என்றால், இந்த இடத்திலிருந்துதான் சிறப்புப் புலனாய்வுக் குழு புறப்பட்டிருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள். பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தாக சொல்லப்படும் பேட்டரியிலும் குழப்பங்கள்.
கார்த்திகேயன், ஜெயின் கமிஷனில் ஆஜராகி, “மனித வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட ‘கோல்டன் பவர் 9-V’ பேட்டரி பேரறிவாளனால் வாங்கப்பட்டது எனப் புலனாய்வில் தெரியவந்தது. ஆனால், அந்த பெல்ட் பாம் எங்கு, எவ்வாறு உருவாக்கப்பட்டது எனத் தெரியவில்லை” என்றார்.
தடயவியல் பேராசிரியர் சந்திரசேகரன் சாட்சியத்தில், “கைப்பற்றப்பட்ட 9-V பேட்டரியின் சிதைந்த பாகத்தில் காணப்பட்ட ஒன்பது இலக்க எண் வரிசையானது எல்லா கோல்டன் பவர் பேட்டரிகளிலும் காணப்படுகிறது. எனவே அது ‘கோல்டன் பவர் பேட்டரி’ என்ற முடிவுக்கு வந்தோம்” என்றார்.
அவரிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தபோது, ‘‘உலோகத் துண்டில் ‘கோல்டன் பவர்’ என்று எழுதப்பட்டிருந்ததா?’’ எனக் கேட்கிறார். ‘‘இல்லை. ஒன்பது இலக்க எண் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை’’ என்றார்.
நீதிபதி ஜெயின், “குண்டு வெடிக்கப் பயன்படுத்தியது, ‘கோல்டன் பவர்’ பேட்டரிதான் என்பது ஒரு மேம்போக்கான (tentative) ஆதாரம்தான்’’ எனச் சுட்டிக்காட்டினார். இதை வைத்துதான் பேரறிவாளனுக்கு மரண தண்டனை வழங்கி, 26 ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.
அதைச் சுற்றித்தான் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அடுக்கி, இன்றுவரை ஏழு பேர் சிறையில் இருக்கிறார்கள்.இன்று உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்குப் பல்நோக்கு புலனாய்வு முகமை (MDMA)யும், மத்திய அரசும் என்ன பதிலைத் தரப்போகின்றன என்பது 26 ஆண்டு கேள்வி அல்ல, வேள்வி!
அதே கேள்வியை இப்போது கேட்கும் நீதிபதி!
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்நோக்கு விசாரணை முகமை அமைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அர்ஜுன் சிங், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் பின்னாளில் கசித்தது. அந்தக் கடிதத்தில் கார்த்திகேயனின் தலைமை மீது சந்தேகங்களை எழுப்பியிருந்தார். ‘பல்நோக்கு விசாரணை முகமையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
அதேபோல ஜெயின் கமிஷனைச் சேர்ந்தவர்களோ, வர்மா கமிஷனைச் சேர்ந்தவர்களோ யாரும் இடம் பெற்றுவிடக்கூடாது’ என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.காரணம், அப்போது இந்தப் பல்நோக்கு விசாரணை முகமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கார்த்திகேயனின் அதிகாரத்துக்குக் கீழானவர்கள்.
கீழ் அடுக்கில் உள்ள அதிகாரி எப்படி மேலதிகாரி செய்த புலன் விசாரணை மீது கேள்வி கேட்க முடியும் என்ற சர்ச்சை எழுந்தது.விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்ட முக்கிய நபர்களில் சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் இன்று வரையிலும் விசாரணைக்கு அழைக்கப்படவே இல்லை.
‘ஏன் விசாரிக்கவில்லை?’ என்று கேட்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். ‘இது எங்கள் எல்லைக்குள் வராது. கோர்ட் நேரத்தை வீணடித்து விட்டீர்கள்’ என்று திருச்சி வேலுசாமிக்கு அபராதம் விதித்தது நீதிமன்றம்.
இப்போது அதே கேள்வியை உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார்.