மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் பெற்றோரும் இணைந்து ஆர்ப்பாட்டம் –

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் பெற்றோரும் இணைந்து பாடசாலை அதிபரின் மீள் வருகையைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

a-m

குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் அதிபரால் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே பாடசாலையில் கடமை புரியலாம் என்று நீதி மன்றம் வழங்கிய ஆணையின் கீழ் அதிபர் மீண்டும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார். இதனையடுத்து அதிபர் வருகைக்கு கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டாம், பாடசாலையைச் சீரழிக்காதே, எதிர்கால சமூகத்தை சீரழிக்காதே, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, கல்வி கற்கும் உரிமையைப் பறிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

மேலும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோரும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.