5G தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய டயலொக்

தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கை, மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கியுள்ளது.

DAIL

5G தொழில்நுட்பத்தை, தெற்காசியாவிலேயே முதன்முறையாக, டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்தே, இப்பெருமை இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன், ஹுவாவி ஆகியவற்றுடன் இணைந்து, இச்சோதனையை, டயலொக் நடத்தியது.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்ர ரத்நாயக்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி பெர்ணான்டோ ஆகியோர், அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

35 Gbps வேகத்துக்கு அதிகமான வேகத்தில், 5G தொழில்நுட்பத்தைப் பெறக்கூடியதாக இருந்ததோடு, தெற்காசியாவில் ஏனைய பகுதிகளையெல்லாம் முந்திக் கொண்டு, அகலப்பட்டை இணைப்புத் தொழில்நுட்பத்தில், எதிர்காலத்தில் புரட்சியை மேற்கொள்வதற்கான அடித்தளத்தை, டயலொக் அக்ஸியாட்டா இட்டுள்ளது.

இதற்கான நிகழ்வில், Massive MIMO, cloud radio, ஸ்மார்ட் வாகனத் தரிப்பு, நிகழ்நேர 4K காணொளி, தொழில்நுட்பத்துறை தன்னியமாக்கல், றோபோக்களைப் பயன்படுத்தல் போன்ற பல்வேறு தீர்வுகள், விளக்கமளிக்கப்பட்டன.

5G தொழில்நுட்பமானது, மிகக் குறைவான உள்ளுறை காலத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக, றோபோ துறை, தொலைவிருந்து சத்திரசிகிச்சை, தன்னியக்கப் போக்குவரத்து, அடுத்த யுகத்துக்கான களியாட்டம் போன்றவற்றில், பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜனவரியில், 4.5G தொழில்நுட்பத்தை, வர்த்தக ரீதியாக ஆரம்பித்த டயலொக் ப்ரோட்பான்ட், 1 Gbpsக்கும் அதிகமான தரவிறக்கல் வேகத்தை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.